Sep 28, 2026 - 02:10 PM

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க வலுசக்தித் திணைக்களத்தின் அணுசக்திப் பொருட்கள் கடத்தலைக் கண்டுபிடித்தல் மற்றும் தடுத்தல் (NSDD) தொடர்பான அலுவலகத்தின் ஊடாக, அணுசக்திப் பொருட்கள் கடத்தலைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றைத் தடுப்பதற்குமான இலங்கையின் திறனை பலப்படுத்துவதற்கான, ஐந்து நாள் பயிலரங்கொன்றினை (செப்டெம்பர் 21-25) நடத்துவதற்காக இலங்கைக் கடற்படையுடன் இணைந்து பணியாற்றியது.
அணுசக்திப் பொருட்கள் கடத்தலைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை விருத்தி செய்வதற்காக, இலங்கை பங்கேற்பாளர்களுடன் அமெரிக்க நிபுணர்கள் இணைந்து பணியாற்றினர்.
இதன்போது சர்வதேச சிறந்த நடைமுறைகள் கருத்தில் கொள்ளப்பட்ட அதேவேளை, அந்நடைமுறைகள் இலங்கையின் சட்ட மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பிற்கு இணங்கியிருப்பதும் உறுதிசெய்யப்பட்டது. அணுசக்தி மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோதக் கடத்தலைச் சிறப்பாகக் கண்டுபிடிப்பதற்கும் அவற்றிற்குப் பதிலளிப்பதற்கும் இலங்கைக்கு உதவி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட தேசிய முகவரமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் இப்பயிற்சி பலப்படுத்தியது.
“தவறான நபர்களுக்குக் கிடைக்கும் அணுசக்திப் பொருட்கள், ஒரு நாட்டின் எல்லைகளையும் கடந்து வெகுதூரம் வரை பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
“இப்பங்காண்மையினூடாக, சட்டவிரோத அணுசக்திப் பொருட்களைக் கண்டுபிடித்து, அவை இலங்கையின் துறைமுகங்களை அல்லது கடல் எல்லைகளைக் கடந்து செல்வதற்கு முன்பே அவற்றைத் தடுப்பதற்கான நடைமுறைக்கேற்ற கருவிகளை இலங்கை முகவரமைப்புகளுக்கு நாங்கள் வழங்குகிறோம். அது இங்குள்ள பாதுகாப்பை பலப்படுத்தி, இந்து சமுத்திரத்தின் இன்றியமையாத வர்த்தக வழித்தடங்களைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்கர்களதும், எமது பங்காளர்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உதவிசெய்கிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
பயிலரங்கு நிறைவடைந்த பின்னரும் இலங்கை முகவரமைப்புகள் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய தெளிவான நடைமுறைகளாக இப்பயிற்சியை மாற்றுவதன் மூலம், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அணுசக்திப் பொருட்கள் கடத்தலுக்கெதிரான நீடித்ததொரு பாதுகாப்பு அரணை உருவாக்குவதற்காக, ஒரு நம்பகமான பங்காளரான இலங்கைக்கு அமெரிக்கா உதவி செய்கிறது.
இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை, இலங்கை அணுசக்தி சபை, இலங்கைச் சுங்கம், துறைமுக அதிகாரசபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், வணிகக் கப்பல் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகம், இலங்கை கடலோரக் காவற்படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இப்பயிலரங்கில் பங்குபற்றினர்.































