Sep 30, 2026 - 09:34 PM

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய் (flydubai - FZ1073) விமானத்தின் முதன்மை விமானியைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிய உதவி விமானி, விமானத்தை நடுவானில் வீழ்த்த முயன்றுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வெளியுடப்பட்டுள்ள வீடியோ அறிக்கையில், இதனை ஒரு "மிகவும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்" என நெதன்யாகு விவரித்துள்ளார்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனச் சுழன்று வேகமாக கீழே இறங்கத் தொடங்கியதையடுத்து, பயணிகள் மற்றும் பணிக்குழுவினர் துணிச்சலாக விமானிகளின் அறைக்குள் (cockpit) நுழைந்துள்ளனர்.
அங்கு உதவி விமானி விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்ய முயன்றதைக் கண்டு, பயணிகள் அவரைக் கீழே தள்ளிப் பிடித்துக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ஏனைய விமானிகளால் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் மற்றும் பணிக்குழுவினரின் இந்த உடனடிச் செயலால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு, ஒரு பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, விமானத்தில் பயணித்த பெரும்பாலான இஸ்ரேலிய பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஓமான் நாட்டைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்ட குறித்த உதவி விமானி, சவூதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியதும் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சவூதி அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தச் சம்பவம் மனநலம் சார்ந்த பிரச்சினை அல்ல என்றும், திட்டமிடப்பட்ட ஒரு "பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி" என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.































