Oct 1, 2026 - 12:35 PM

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, நேற்று (30) டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தச் சந்திப்பில் டெல்லி மாநிலக் கல்வி அமைச்சர் அசீஷ் சூட் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, டெல்லி மாநில மக்களின் தேவைகள், நலன்புரிச் சேவைகள் மற்றும் நகர்ப் பகுதி அபிவிருத்திக்காகத் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் முக்கிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான குழுவினர் மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.
குறிப்பாக, டெல்லி நகரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் மின்சார பஸ் சேவைகள், மின்சார வாகன பயன்பாட்டு ஊக்குவிப்பு மற்றும் மின்னேற்ற வசதிகளை விரிவுபடுத்துதல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
டெல்லி அரசு மின்சார பஸ் சேவைகளை விரிவுபடுத்தி வருவதுடன், 2026ஆம் ஆண்டில் பெருமளவிலான மின்சார பஸ்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், பெண்களின் பொருளாதார வலுவூட்டல், சுயாதீனம், சிறுவர்கள் மற்றும் மக்களின் நலன், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக டெல்லி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.
இதேவேளை, இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக, பொருளாதார மாற்றங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்கள் குறித்து டில்வின் சில்வா தெளிவுபடுத்தினார்.
அத்துடன், நாடு முழுவதும் நிலையான சுற்றுச்சூழல் தூய்மையை உறுதி செய்வதற்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka” திட்டம் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.































