Oct 2, 2026 - 02:05 PM

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், ஜெட் ஏ-1 (Jet A-1) விமான எரிபொருள் குழாய்ப் பாதை மற்றும் புதிய சேமிப்புத் தாங்கி தொகுதிகள் அமைக்கும் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் வலுசக்தித் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்தல், போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகிய தேசிய இலக்குகளை முன்வைத்து இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, முத்துராஜவெல சேமிப்பு வளாகத்தில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை 21 கிலோமீற்றர் நீளமும் 10 அங்குல விட்டமும் கொண்ட பூமிக்கடியிலான விசேட எரிபொருள் குழாய்ப் பாதை அமைக்கப்படவுள்ளது.
அத்துடன், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் மொத்தமாக 92,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட 5 புதிய ஜெட் ஏ-1 விமான எரிபொருள் தாங்கிகள் கட்டப்படவுள்ளன. இதில் தலா 30,000 கனமீற்றர் கொண்ட 2 பெரிய தாங்கிகள், தலா 15,000 கனமீற்றர் கொண்ட 2 நடுத்தர தாங்கிகள் மற்றும் 2,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட கூடுதல் தாங்கி ஒன்று அடங்கும். இந்தத் திட்டம் 30 மாதங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம். இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தினால் முத்துராஜவெல முனையத்தில் எரிபொருள் சேமிப்பு திறனை வலுப்படுத்தும் வகையில், அங்கு மேலும் 3 புதிய தாங்கிகள் கட்டப்படவுள்ளன. இதில் தலா 15,000 கனமீற்றர் கொண்ட 2 தாங்கிகளும், 10,000 கனமீற்றர் கொண்ட ஒரு தாங்கியும் அடங்கும்.
இதன் மூலம் 40,000 கனமீற்றர் கூடுதல் சேமிப்பு திறன் கிடைக்கும். 18 மாத ஒப்பந்தக் காலத்தைக் கொண்ட இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைய உருவாக்கப்படும் இந்தப் புதிய கட்டமைப்பு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை வலுப்படுத்தி, தடங்கலற்ற விநியோகத்தை உறுதிசெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.































