Oct 4, 2026 - 08:30 AM

மருந்தகங்கள் என்ற போர்வையில் சிலர் போதை மாத்திரைகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 11வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலதிகமாக கருத்து தெரிவிக்கையில், சட்டவிரோத போதைப்பொருள் சோதனைகளின் போது பொதுமக்கள் தரப்பிலிருந்து போதை மாத்திரைப் பயன்பாடு தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருந்தக உரிமையாளர்களை அழைத்து அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடி, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலதிகமாகத் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், தராதரங்கள் பார்க்காமல் எவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் வலியுறுத்தினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல,
"சட்டவிரோத போதைப்பொருட்களைக் கண்டறியும் பயணத்தில், பொதுமக்கள் தரப்பிலிருந்து இந்த போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் வருகின்றன. அப்படியென்றால் இந்த போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைக்கின்றன? சிலர் வெவ்வேறு கதைகளைக் கூறுகிறார்கள். குறிப்பிட்ட சில மருந்தகங்கள், 'அந்த மருந்தகத்தில்தான் இந்த போதை மாத்திரைகள் பெறப்படுகின்றன' என பிரபலமடைந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக நமது அமைச்சுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெரியவர்களை சீரழிக்கும் இந்த போதை மாத்திரைகள் இவ்வாறான மருந்தகங்கள் மூலமே விநியோகிக்கப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி, மருந்தகங்கள் என்ற போர்வையில் வேறு நபர்களும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனவேதான் நாங்கள் மாவட்ட மட்டத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருந்தக உரிமையாளர்களை அழைத்து அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலை நடத்தி கோரிக்கை விடுக்கவுள்ளோம்... அதேபோல், ஆயுர்வேதம் என்ற பெயர்ப்பலகையை முன்னால் போட்டுக்கொண்டு அதற்குள் தடைசெய்யப்பட்ட போதை ஊக்கமருந்துகளை விற்பனை செய்கிறார்கள்."
"நமது நாட்டில் ஆட்களின் முகத்தைப் பார்த்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் இருந்தது, பிரித்தாளும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றி பெற்றால், ஆட்களின் முகத்தைப் பார்த்து சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என நாங்கள் மக்கள் ஆணையையைப் பெற்றோம். இரண்டு ஆண்டுகள் கழிந்து செல்லும்போது உங்களுக்குத் தெளிவாக விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்; நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் ஒன்றுதான், முன்னாள் பொலிஸ் மா அதிபரும் ஒன்றுதான், கிராமத்தில் உள்ள சாதாரண நபரும் ஒன்றுதான். அனைவருக்கும் சமமான சட்டத்தையே நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்காகக் கொண்டு வந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.































