Oct 5, 2026 - 11:47 PM

பாடசாலையில் அனுமதிக்கப்பட்டு எவ்வித நியாயமான காரணமும் இன்றி நீண்டகாலமாக பாடசாலைக்குச் செல்லாமல் தவிர்த்து வந்த 30க்கும் மேற்பட்ட பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று (05) இப்பிள்ளைகளை சிங்கள, இந்து மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பாடசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி அப்பிள்ளைகளின் தகவல்களைக் கண்டறிந்த பின்னர், பொலிஸாரின் தலையீட்டுடன் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் மீண்டும் வகுப்பறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நியாயமான காரணமின்றி தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தொடரப்படும் என கிராண்ட்பாஸ் பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இப்பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஊடாக இப்பிள்ளைகள் பற்றிய நாளாந்த தகவல்களைப் பெற்று விசேட கண்காணிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரினால் எடுக்கப்பட்ட இந்த பாராட்டுக்குரிய நடவடிக்கை காரணமாக, பறிபோகவிருந்த பல பிள்ளைகளின் எதிர்காலத்தை மீண்டும் வெளிச்சமாக்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.































