Oct 6, 2026 - 04:25 PM

நாட்டில் பல பிரதேசங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இன்று (6) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இலாப நோக்கைக் கருத்திற் கொண்டு தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர் தெரிவித்தார்.
உலகச் சந்தை விலை உயர்வை அடுத்து அரசாங்கம் மானியங்களை வழங்கிய போதிலும், அந்த மானியம் தமக்குப் போதாது எனக் கூறி அந்த நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், இதற்கு எதிராக அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் 55 பிரதான இடங்களில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் (CEYPETCO) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லை எனவும், எனவே அந்தப் பகுதிகளைச் சூழவுள்ள நிரப்பு நிலையங்களுக்குத் தற்போது அதிகளவில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, இலாபத்தை மட்டும் நோக்கமாக்காமல் எரிபொருளை விநியோகிக்க முன்வருமாறு ஏனைய நிறுவனங்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில், "உலகச் சந்தையில் விலை அதிகரிக்கும் அதே விலைக்கு நாங்கள் மக்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை. அதில் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. அதற்கமையவே, கடந்த முறை 57 பில்லியன் ரூபாவையும், இம்முறை 41 பில்லியன் ரூபாவையும் அரசாங்கம் திறைசேரியிலிருந்து எரிபொருள் மானியமாக வழங்கியது.
கடந்த முறையும் இந்தப் பிரச்சினை எழுந்தபோது, அத்தொகை போதாது எனச் சில நிறுவனங்கள் கூறின. உண்மையில் இதனால் அவர்களின் இலாபப் பங்கு மட்டுமே குறைகிறது. அதனால் அவர்கள் சந்தைக்கு விடுவிக்கும் எரிபொருள் அளவைக் குறைக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 55% ஆக இருந்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒட்டோ டீசல் (Auto Diesel) சந்தைப் பங்கு தற்போது 76% ஆக அதிகரித்துள்ளது.
இதற்குச் சமாந்தரமாக, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 21% ஆக இருந்த லங்கா ஐஓசி (LIOC) நிறுவனத்தின் சந்தைப் பங்கு தற்போது 12% ஆகக் குறைந்துள்ளது. பெட்ரோல் விநியோகத்திலும் இதே நிலைமையே காணப்படுகிறது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகித்து வருகின்றது. எனினும், நாட்டில் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாத 55 பிரதான இடங்கள் உள்ளன.
அந்தப் பகுதிகளைச் சூழவுள்ள நிரப்பு நிலையங்களுக்கு நாங்கள் கூடுதல் எரிபொருளை வழங்கி வருகிறோம். உலகளாவிய ரீதியில் காணப்படும் இந்த நெருக்கடியான சூழலில் இலாபத்தைப் பற்றி மட்டும் யோசிக்காமல் மக்களுக்காக எரிபொருளை விநியோகிக்குமாறு தனியார் நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.































