Oct 7, 2026 - 03:19 PM

இரண்டு வருடங்களில் தனது இரண்டாவது விஜயத்திற்காக வருகை தரும் சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டல்ஸா (LCS 16), இலங்கையின் மிக அன்பான வரவேற்புடன் இன்று (07) கொழும்பிற்கு வருகை தந்தது.
இத்துறைமுக விஜயமானது, அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் நீடித்த கடல்சார் பங்காண்மையினையும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பைப் பேணுவதில் எமக்கிருக்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டினையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“அமெரிக்கக் கப்பல்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு விஜயமும், எமது நாடுகளுக்கிடையேயான நட்புறவையும், எமது மாலுமிகளுக்கிடையேயான பிணைப்புகளையும் ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
“இலங்கை எமது மாலுமிகளுக்கு தொடர்ந்து அளித்து வரும் அன்பான வரவேற்பிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எமது பங்காண்மையினை பலப்படுத்துகின்ற, மிகவும் அவசியமான தருணங்களில் எமது இரு நாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு உதவுகின்ற நம்பிக்கையையும், உறவுகளையும் இவ்வாறான விஜயங்கள் கட்டியெழுப்புகின்றன.” என அவர் மேலும் தெரிவித்தார்.
யுஎஸ்எஸ் டல்ஸா கடைசியாக 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்பிற்கு வருகை தந்தது. கப்பலானது இந்தோ பசிபிக்கில் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்பி, தேவையான ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, அமெரிக்க மற்றும் இலங்கை மாலுமிகளுக்கிடையிலான பிணைப்புகளை பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பினையும் இந்த நல்லெண்ண விஜயம் வழங்குகிறது.
இப்பயணமானது, கப்பல் வருகைகள், தொழில்முறை பரிமாற்றங்கள், பயிற்சி மற்றும் Cooperation Afloat Readiness and Training (CARAT) போன்ற கூட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையில் காணப்படும் நீண்டகால ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துகிறது.
அது எமது இரு படைகளினதும் ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறனையும், ஒன்றிணைந்து பணியாற்றும் திறனையும் மேம்படுத்துகிறது.
வேகம் மற்றும் பல்வேறு திறன்களுக்காக கட்டமைக்கப்பட்ட யுஎஸ்எஸ் டல்ஸா, ஆழமற்ற நீர் மற்றும் திறந்த கடல் இரண்டிலும் தொழிற்படக் கூடியது. இது அமெரிக்காவின் அதிநவீன கடல்சார் திறனையும், தொழினுட்ப தலைமைத்துவத்தினையும் பிரதிபலிக்கிறது.
யுஎஸ்எஸ் டல்ஸா பற்றி: யுஎஸ்எஸ் டல்ஸா என்பது, கடல்சார் பாதுகாப்பு, கடல் மீதான கட்டுப்பாடு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலுள்ள பங்காளர்களுடன் இணைந்து செயற்படுதல் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட, சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும்.
அலபாமா மாநிலத்தின், மொபைல் நகரிலுள்ள Austal USA நிறுவனத்தினால் கட்டப்பட்ட இக்கப்பலானது, தனித்துவமான ‘ட்ரைமரன்’ (trimaran) வகை உடலமைப்பைக் கொண்டுள்ளதுடன், 40நொட்ஸ் வேகத்தை விட அதிக வேகத்தை எட்டும் திறனுடையதாகும்.
இதன் பரந்த விமான இயங்குதளமும், மாற்றியமைக்கக்கூடிய செயற்பணி வெளிகளும், கடல்சார் பாதுகாப்பு முதல் மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்பு வரையிலான பல்வேறு பணிகளுக்குத் தேவையான ஹெலிகொப்டர்கள், சிறிய படகுகள், ஆளில்லா அமைப்புகள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு உதவுகின்றன.
இந்நெகிழ்வுத்தன்மையானது குறிப்பாக, பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் செழிப்பிற்கு பாதுகாப்பான கடல்வழித் தடங்கள், விரைவான பதிலளிப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் பங்காளர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியவை இன்றியமையாதவையாக விளங்கும் இந்து சமுத்திரத்தில் மிகவும் பயனுடையதாகும்.
2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி சான் பிரான்சிஸ்கோவில் வைத்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட, ஓக்லஹோமா மாநிலத்திலுள்ள டல்ஸா நகரின் பெயர் சூட்டப்பட்ட யுஎஸ்எஸ் டல்ஸா, “கடினமான, இயலுமையுள்ள, தயார்” என்ற குறிக்கோள் வாசகத்தின்கீழ் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொழிற்படுகிறது.































