Oct 7, 2026 - 04:14 PM

நடிகர் தனுஷின் சமீபகால நடவடிக்கைகளும், அவரது பிறந்த நாளை ஒட்டி வெளியான "தலைவர் தனுஷ்" என்ற போஸ்டரும் அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் தனுஷ் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாகத் திரைத்துறை நட்சத்திரங்களின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் தனுஷின் மேடைப் பேச்சுகளும், அவரது ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளும் தமிழ் சினிமாவில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. 'அடுத்த அரசியல் புயல் தனுஷா?' என்ற கேள்விகள் கோலிவுட் வட்டாரத்தில் தீவிரமாக எழுந்துள்ளன.
சமீபத்தில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தினர் தங்கள் நற்பணி இயக்கத்திற்காக அறிமுகப்படுத்திய சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடி, ஒரு புதிய அரசியல் கட்சியின் கொடியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது. இதுவே அவரது அரசியல் வருகை குறித்த பேச்சுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது.
இருப்பினும், "இந்தக் கொடி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், திருவள்ளூர் நலத்திட்ட உதவி விழாவில் பேசிய தனுஷ், தன்னுடைய ரசிகர்களின் ஒற்றுமைக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்றும் அந்தச் சக்திக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக ஒருங்கிணைத்து, பின்னர் அரசியல் கட்சியாக மாற்றிய அதே பாதையைத் தனுஷும் பின்பற்றத் தொடங்கிவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்தது. அரசியல் ஊகங்கள் ஒருபுறம் எரிய, மற்றொரு புறம் அமைதியாகத் தனது சமூகப் பங்களிப்பைத் தொடங்கியுள்ளார் தனுஷ். தான் பத்தாம் வகுப்பு வரை பயின்ற சென்னை சாலிகிராமத்தில் உள்ள 'தாய் சத்யா' பள்ளிக்கு 3 தளங்கள் கொண்ட அதிநவீன புதிய கட்டடத்தை சொந்தச் செலவில் கட்டிக் கொடுத்தார்.
இதன் திறப்பு விழாவில், தனது குடும்பத்தினர் மற்றும் பழைய பள்ளி நண்பர்களுடன் கலந்துகொண்டார் தனுஷ். பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த தனுஷை மாணவர்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் தூவி நடிகர் தனுஷ் மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பட விழாக்களில் அரசியல் கலந்த பேச்சுகளை பேசி வந்த தனுஷுக்கு, எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் தான் வாழ்க்கை என்ற வசனமும் கவனத்தை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, ராயன் பட விழாவில் நாங்க எல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக் கூடாதா? என தனுஷ் பேசியது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், போயஸ் கார்டனில் முதல் பிறந்த நாளை கொண்டாடிய தனுஷுக்கு வாழ்த்து கூற திரண்ட ரசிகர்களை அவர் வரவேற்ற விதமும் கவனம் ஈர்த்தது. ரசிகர்கள் எழுப்பிய தலைவா கோஷமும், தலைவர் தனுஷ் என்ற போஸ்டரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்திற்கு பின்னர் போயஸ் கார்டனில் எழுந்த தலைவா கோஷம் எழுந்த நிலையில், 2031 இல் விஜய் வெர்சஸ் தனுஷ் என்ற நிலை உருவாகலாம் என ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் கூறி இருப்பது கவனம் ஈர்த்தது. அண்மையில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, “அரசியலுக்கு வருவது தனுஷின் தனிப்பட்ட முடிவு. தனுஷ் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பித்து விட்டு போகட்டும் இல்லை என்றால் இருக்கட்டும்" என்றார்.
இந்த நிலையில் தான் புதிய அரசியல் கட்சியின் பெயரை தனுஷின் சார்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அண்மையில் தனது ரசிகர் மன்றங்களுக்கு மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை நியமித்து தனுஷ் உத்தரவிட்ட நிலையில், அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அதன்படி கட்சிக்கு 'தமிழக எழுச்சிக் கழகம்' என்று தனுஷ் பெயர் சூட்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் பொதுவெளியில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும் தனுஷ் கட்சியின் பெயர் மற்றும் கொள்கை உள்ளிட்டவற்றை அறிவிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.































