Oct 14, 2026 - 03:05 PM

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
முப்பீடங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த விசேட குழு நியமிக்கப்பட்டது.
குறித்த விடயங்களை ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் புதிய சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைத் திருத்துவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கமைய, பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதகுருமார்களை சிறைச்சாலையில் தடுத்து வைக்கையில் அமுல்படுத்தப்பட்ட சட்டவிதிகளுக்கான திருத்த யோசனைகள் இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குழுவின் தலைவராக செயற்பட்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீரவினால் இந்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
குழுவின் உறுப்பினர்களான நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜே. சேனாரத்ன மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர்களில் ஒருவரான ஏ.சீ. கஜநாயக்க ஆகியோரும் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.

































