Oct 14, 2026 - 03:33 PM

‘வேர்ல்ட் டி20 கான்டினன்ட் கப்’ (World T20 Continent Cup) தொடரில் பங்கேற்பதாக வெளியான தகவலுக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது அனுமதியோ இன்றி போட்டி அமைப்பாளர்கள் தனது பெயரைப் பயன்படுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வேர்ல்ட் டி20 கான்டினன்ட் கப் தொடரில் எனது பெயர் பங்கேற்பாளராக இடம்பெற்றுள்ளதை கவனித்தேன். எனது அனுமதியோ இன்றி எனது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எனது குழு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.
அங்கீகரிக்கப்படாத அறிவிப்புகளை செய்தியாக வெளியிடவோ, நம்பவோ வேண்டாம் என்று ஊடகங்களையும் எனது ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்து வருவதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான், குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் தனக்கென முத்திரை பதித்தவர்.
167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 17 சதங்கள், 39 அரைசதங்கள் உள்பட 6,793 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 போட்டிகளில் விளையாடியுள்ள தவான், 2,315 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 7 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் 68 ஆட்டங்களில் களமிறங்கி 1,759 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 11 அரைசதங்கள் அடங்கும்.
தற்போது, தனது அனுமதியின்றி பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷிகர் தவான் தெரிவித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

































