Oct 16, 2026 - 01:53 PM

தமிழ்நாட்டின் கோவையின் காந்திபுரத்தில் 300 கோடி இந்திய ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (16) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
நூலகத்தைத் திறப்பதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அவிநாசி வீதி வழியாக 11.4 கிலோ மீற்றர் தூரம் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
வீதியின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
நூலக வளாகத்திற்கு வருகை தந்த முதலமைச்சருக்குக் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நூலக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை மற்றும் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.
ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 7 தளங்களுடன் பிரமாண்டமாகக்கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், மாணவர்களுக்கான அறிவியல் மையம், சிறுவர் நூலகம், வாசிப்புப் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கோவையில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைப்பதுடன், புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துகொள்ளும் முதலமைச்சர் விஜய், இந்த நிகழ்ச்சியின் ஊடாக 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
































