Oct 16, 2026 - 01:56 PM

தெற்காசியாவின் பரபரப்பான மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் வர்த்தக கேந்திர ஸ்தானங்களில் ஒன்றை பலப்படுத்தும் வகையில், கொழும்புத் துறைமுகத்தின் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக 17 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டினை மேற்கொள்வதாக அமெரிக்கா இன்று (16) அறிவித்தது.
இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் பங்காண்மையுடன், பொருட்களை விரைவாக நகர்த்துவதற்கும், கப்பல் போக்குவரத்துத் தாமதங்களையும், செலவுகளையும் குறைப்பதற்கும், உதவி செய்யும் வகையில் அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய டிஜிட்டல் கட்டமைப்புகளை அமெரிக்கா அறிமுகப்படுத்தும். இச்செயற்திட்டமானது, அமெரிக்க விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாத்து, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக வாய்ப்புகளை
விரிவுபடுத்தி, அமெரிக்க வணிகங்களுக்கு உதவி செய்யும் அதேவேளை, உலகளாவிய வர்த்தகத்தில் இலங்கை வகிக்கும் பங்கினையும் பலப்படுத்தும்.
அமெரிக்கா நிதியளிக்கும் இச்செயற்திட்டமானது, ஆவணப் பணிகளைக் குறைப்பதற்காகவும், ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காகவும், கொழும்புத் துறைமுகத்தினூடாக சரக்குகளைக் கையாளும் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்காகவும், Maritime Single Window மற்றும் Port Community System ஆகிய இரண்டு இணைக்கப்பட்ட டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு உதவி செய்யும். வர்த்தகத்தை மெதுவாக்கும் காகிதப்பணிகளையும், தொடர்பறுந்த செயல்முறைகளையும் இவ்வமைப்புகள் மாற்றியமைத்து, கப்பல் நிறுவனங்கள், சுங்க அதிகாரிகள், குடிவரவு அதிகாரிகள், துறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் போன்ற தரப்பினரும், வணிகங்களும் இலத்திரனியல் முறையில் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கு அனுமதிக்கும்.
ஆண்டுதோறும் அமெரிக்காவுடன் தொடர்புடைய சுமார் 30 பில்லியன் டொலர் பெறுமதியான சரக்குகளை கொழும்புத் துறைமுகம் கையாள்வதுடன், தெற்காசியாவை உலகளாவிய சந்தைகளுடன் இணைக்கும், கப்பல்களுக்கிடையே சரக்குகளை மாற்றியேற்றும் ஒரு இன்றியமையாத கேந்திர ஸ்தானமாகவும் தொழிற்படுகிறது. “அமெரிக்க வர்த்தகமானது, வினைத்திறனான, நம்பகமான மற்றும் நவீன வர்த்தகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தயாராக இருக்கும் துறைமுகங்களில் தங்கியுள்ளதென,” இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
ஒவ்வோராண்டும் அமெரிக்காவிற்கும், அமெரிக்காவிலிருந்தும் செல்லும் அரை மில்லியனுக்குமதிகமான சரக்குக் கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தினூடாக நகர்ந்து செல்கின்றன. இது பல பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சரக்குகள் வேகமாக நகரும்போதும், கப்பல் போக்குவரத்துச் செலவுகள் குறையும்போதும், அமெரிக்க நிறுவனங்கள் சிறந்த போட்டித்தன்மையுடையவையாக மாறுவதனால், அமெரிக்க நுகர்வோர் பணத்தை மீதப்படுத்துகின்றனர்.
17 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த அமெரிக்க முதலீடானது, எமது பொருளாதாரங்கள் தங்கியிருக்கும் விநியோகச் சங்கிலிகளை பலப்படுத்துவதுடன், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கக் கடைகளுக்கு அனுப்பப்படும் இலங்கை ஆடைகள் முதல், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளூடாகச் செல்லும் அமெரிக்க இயந்திரங்கள், உணவு வகைகள் மற்றும் அன்றாடப் பாவனைப் பொருட்கள் வரை, துறைமுகங்களில் ஏற்படும் தாமதங்கள் வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் செலவுகளை அதிகரிக்கின்றன. இலங்கை தனது துறைமுகத் திறனை விரிவுபடுத்துகையில், அதிகளவான சரக்குகளை முகாமை செய்வதற்கும், கப்பல்கள் துறைமுகத்தில் செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்கும், பிராந்திய கடல்சார் கேந்திர ஸ்தானமொன்றாக கொழும்பின் போட்டித்தன்மையினை பேணுவதற்கும் நவீன டிஜிட்டல் உட்கட்டமைப்பு அத்தியாவசியமானதாகும்.
“பிராந்தியத்தின் ஒரு கடல்சார் கேந்திர ஸ்தானமாக கொழும்பின் எதிர்காலமானது, பௌதீக உட்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதில் மட்டுமன்றி, எமது துறைமுகங்கள் தொழிற்படும் முறைகளை நவீனமயமாக்குவதிலும் தங்கியிருக்கிறது.” என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க கூறினார்.
“வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்குவதை மேம்படுத்துவதற்கும், வணிகங்களை ஈர்ப்பதற்கும், சர்வதேச சந்தைகளுடனான எமது தொடர்புகளை பலப்படுத்துவதற்கும் இச்செயற்திட்டம் இலங்கைக்கு உதவி செய்யும். இலங்கையின் நீண்டகாலப் பொருளாதாரப் போட்டித்தன்மைக்கு பங்களிப்புச் செய்யும் இவ்வாறானதொரு செயற்திட்டத்திற்கு அமெரிக்கா வழங்கும் உதவியினை நாங்கள் பாராட்டுகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
“இப்பிராந்தியத்தில் முன்னணி கடல்சார் மற்றும் ஏற்பாட்டியல் கேந்திர ஸ்தானமொன்றாக தொடர்ந்து திகழ வேண்டுமெனும் இலங்கையின் இலட்சியத்திற்கு, கொழும்புத் துறைமுகத்தை நவீனமயமாக்குவது அவசியமானதாகும்.” என இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி.பராக்கிரம திசாநாயக்க கூறினார். “துறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு முகவரமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களை தொடர்புபடுத்துவதற்கும், தேவையற்ற தாமதங்களைக் குறைப்பதற்கும், கப்பல் நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எதிர்வுகூறக்கூடியதும், வினைத்திறனுடையதுமான சேவைகளை வழங்குவதற்கும் இப்புதிய டிஜிட்டல் கட்டமைப்புகள் எமக்கு உதவி செய்யும். எமது துறைமுகங்களை எதிர்கால வளர்ச்சிக்காகத் தயார்படுத்தும் இவ்வேளையில், அமெரிக்காவுடனான இப்பங்காண்மையினை நாங்கள் வரவேற்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான வன்பொருள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளையும் இச்செயற்திட்டம் உருவாக்கும். இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளரைத் தேர்ந்தெடுப்பதற்காக, வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த செயன்முறையொன்று பின்பற்றப்படும். இன்றியமையாத வர்த்தகப் பாதைகளைப் பலப்படுத்துதல், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான கடல்சார் வர்த்தகப் பங்காளராக இலங்கையின் பங்கை மேலும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், இந்த முதலீடு அமெரிக்கப் பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துகிறது.
































