Oct 20, 2026 - 06:35 PM

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், நீதிமன்ற உத்தரவின்படி காவந்திஸ்ஸ யானை தொடர்பான பிரேத பரிசோதனை பேராதனை கால்நடைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நீதிமன்றத்திற்கு அறிக்கைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,
"நீதிமன்ற உத்தரவின்படி காவந்திஸ்ஸ யானை தொடர்பான பிரேத பரிசோதனை பேராதனை கால்நடைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நீதிமன்றத்திற்கு அறிக்கைப்படுத்தவுள்ளனர். மேலும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் சார்பில், திணைக்களத்தின் அதிகாரிகள் இன்றி திணைக்களத்தின் உள்விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மிருககாட்சிசாலை திணைக்களத்தின் பணிப்பாளர், சுற்றாடல் அமைச்சின் பணிப்பாளர், பேராதனை கால்நடை மருத்துவ பீடத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் அடங்கிய குழுவினூடாக இதற்கிடையில் விசாரணையொன்று இடம்பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, ஜனாதிபதியால் இத்துறையைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய ஆறு பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி குற்றப்புலனாய்வு திணைக்களமும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இருவர் ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை மேல் மாகாண வன அலுவலகத்திற்குப் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, வலான ஊழல் தடுப்புப் பிரிவினர்தான் இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட முதல் நபரின் வீட்டிலிருந்து ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில்தான் இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மற்றைய 4 பேரும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் போது கிடைக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்றார்.
































