Oct 20, 2026 - 09:35 PM

தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடிக்கக்கூடிய மிகவும் பொருத்தமான அணி 'சர்வஜன அதிகாரம்' என அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, தொம்பே மற்றும் நீர்கொழும்பு தொகுதிகளுக்கான அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (20) கொழும்பில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பொதுமக்கள் எடுத்த தவறான தீர்மானங்களை தற்போதைய காலகட்டத்தில் அவர்களே சரியாக்கி வருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
"எங்களது மதிப்பிற்குரிய ஜனாதிபதி எல்லா இடங்களிலும் கூறும் ஒரு விடயம் என்னவென்றால், பழைய ஆட்களால் எங்களைத் தோற்கடிக்க முடியாது என்பதே. உண்மைதானே? நாங்கள் இல்லை என்று கூறவில்லையே. பழைய அரசியல் இயக்கத்தால் மாலிமாவை (தேசிய மக்கள் சக்தியை) தோற்கடிக்க முடியாது. ஒரு புதிய அரசியல் இயக்கம் தேவைப்படுகிறது. ஜனாதிபதி கூறுவது போல எங்களை விட சிறந்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அப்படியாயின், அவர்களை விட பத்து மடங்கு சிறந்த மனிதர்கள் தான் இதோ இங்கு இருக்கிறார்கள். இங்கு இருக்கும் அனைவரும் தங்களது உழைப்பாலும், சுயநம்பிக்கையாலும் முன்னேறியவர்கள் தானே. யாரிடமும் பிச்சை எடுத்துப் பிழைத்தவர்கள் யாரும் இல்லையே. எனவே ஒரு சிறந்த அணி வந்திருக்கிறது. அப்படியானால் இந்த அணியின் விருப்பமும் எதிர்பார்ப்பும் என்ன? களவாடுவதா? ஊழல் செய்வதா? அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதா? இல்லை, இங்குள்ள எவருக்கும் அப்படி ஒன்று தேவையில்லை. ஏன்? இதில் பெரும்பாலானோர் சிவில் சமூகத்தில் ஏற்கனவே சிவில் அதிகாரம் படைத்தவர்கள். இப்போது நமது அர்ப்பணிப்பின் அளவு வேறு நிலைக்குச் சென்றுள்ளது. காரணம் என்ன? நமக்கு தற்போது பெருமளவில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. பாரிய அடக்குமுறை. தனிப்பட்ட முறையில் எனக்கு அடக்குமுறை இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எனவே இவைதான் நாம் செய்த, செய்கின்ற அர்ப்பணிப்புகள். ஆனால், இந்நாட்டு மக்கள் தவறான தீர்மானங்களை எடுத்திருக்கலாம். இருப்பினும் எடுத்த தவறான தீர்மானங்களை அவர்கள் மிக வேகமாகச் சரிசெய்து வருகிறார்கள்." என்றார்.
































