Oct 20, 2026 - 10:33 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

செம்மணி புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு என்பன காரணமாக இருந்திருக்கலாம் என்றும், இந்த புதைகுழியானது முறையான இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன என்பதற்கான சில குறிப்பிடத்தக்க ஆதாரங்களைக் கொண்டுள்ளது என்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கை, பேராசிரியர் ராஜ் சோமதேவவால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் செம்மணி புதைகுழியானது உலகின் பல பகுதிகளில் அவதானிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மனித புதைகுழிகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டுகின்றது.
குறிப்பாக முறையான முறையில் அடக்கம் செய்யப்படும் சூழமைவுகளுடன் ஒப்பிடுகையில், இந்த புதைகுழி குறிப்பிட்டுக் கூறக்கூடிய அதிக ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றது.
இறந்தவர்களின் அதிக அடர்த்தியானது சடலங்கள் எந்த சூழ்நிலையில் அடக்கம் செய்யப்பட்டன என்பதை முறையாகவும் துல்லியமாகவும் நிரூபிக்கவில்லை. அவ்வாறு நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரப்பூர்வ விடயங்கள் தென்படவில்லை.
செம்மணி புதைகுழியில் இருந்து அதிகளவிலான என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டமைக்கு, இதன் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு என்பன இருந்திருக்கக்கூடும். ஆதலால் சடலங்களை முறையாக அப்புறப்படுத்துவதை விட அதிவிரைவாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை அக்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம்.
இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அதிகளவில் மீட்கப்படாமைக்கும் இதுவே ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் இதுவரை மீட்கப்பட்ட சில தடயங்கள், அங்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
செம்மணியில் அகழாய்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எதிலும், எலும்பு எச்சங்களுடன் இணைந்த நிலையில் நேரடியாகப் பாதுகாக்கப்பட்ட ஆடைகளுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இருப்பினும், துணிப் பொருட்கள் எஞ்சியிருக்கவில்லை என்பதற்காக, இறந்தவர்கள் ஆடையின்றி அடக்கம் செய்யப்பட்டனர் என்று பொருள் கொள்ள முடியாது.
துணிகள் உள்ளிட்ட கரிமப் பொருட்கள், சாதகமற்ற அடக்கச் சூழல்களில் சிதைவடையக்கூடியவை. அவை பாதுகாக்கப்படுவதில் அவற்றைச் சூழ்ந்துள்ள மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், ஈரப்பதத்தின் அளவு, நுண்ணுயிர்களின் செயல்பாடு மற்றும் அடக்கம் செய்யப்பட்டிருந்த கால அளவு ஆகியன பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
சில சந்தர்ப்பங்களில், மனித எலும்புக்கூடுகளுடன் தொடர்புடைய இடங்களில் பொத்தான்கள், பொத்தான் துளை வளையங்கள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படும் சிறிய உலோகப் பொருத்திகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அவை குறைந்தபட்சம் சிலர் அடக்கம் செய்யப்பட்டபோது ஆடை அணிந்திருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு ஆதரவளிக்கும் சான்றுகளாக அமைகின்றன.
எனவே, செம்மணியில் பாதுகாக்கப்பட்ட துணி எச்சங்கள் கிடைக்காத நிலையை, அடக்கம் செய்யப்பட்ட காலத்தில் ஆடைகள் இல்லாதிருந்ததற்கான உறுதியான சான்றாகக் கருதாமல், எச்சங்கள் காலப்போக்கில் சிதைவடைந்ததன் விளைவாக ஏற்பட்ட தொல்லியல் அவதானிப்பாகவே கருத வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
































