Oct 20, 2026 - 11:04 PM

ஞானசார தேரருக்காகப் பிக்குகள் ஒன்றிணைந்து நடத்திய அமைதிப் பேரணியானது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அல்ல என சிரேஷ்ட பேராசிரியர் கொடபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் இனவாதத்திலோ அல்லது அரசியலிலோ ஈடுபடவில்லை என்றும், இல்லாத மதவாதத்தையும் இனவாதத்தையும் இருப்பதாகக் காட்ட முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (20) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அனுநாயக்க தேரர் இதனைக் கூறினார்.
ஞானசார தேரருக்காக இளம் பிக்குகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அரசியல் பயணமாக அர்த்தப்படுத்துவதை நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர், அக்குழுவினர் காவி உடை மற்றும் பௌத்த தர்மத்திற்காகவே ஒன்றிணைந்துள்ளனர் என வலியுறுத்தினார்.
ஏதேனும் ஒரு விடயம் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதை அரசாங்கத்திற்கு எதிரான செயல்பாடாகக் கருத முடியாது என்றும், பிக்குகள் தங்களது கருத்துக்களை அமைதியாகவும் தர்க்கரீதியாகவும் முன்வைக்கக்கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்ட விதம் தவறானது எனக் குறிப்பிட்ட அனுநாயக்க தேரர், அந்த நடைமுறை சரியான முறைமையின் கீழ் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இச்ச சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும் வரை உரிய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் கொடபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் மேலும் தெரிவித்தார்.
































