Oct 20, 2026 - 11:54 PM

நுரைச்சோலை மின் நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டதன் காரணமாக மின்வெட்டைச் சந்திக்க நேர்ந்ததாக வெளியாகும் குற்றச்சாட்டுகள் உண்மையானவையல்ல என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
மின் நிலையத்தின் 1 ஆம் இலக்க மின் உற்பத்தி இயந்திரம் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் 4 ஆம் திகதி வரை மூடப்பட்டிருந்ததாகவும், செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் இதற்காக புதிதாகக் கொண்டுவரப்பட்ட நிலக்கரியே பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்காரணமாக நுரைச்சோலை மின் நிலையம் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதாக வெளியாகும் செய்திகளை மறுத்த அமைச்சர், இந்த மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்தமை தொடர்பிலும் உள்ளக விசாரணை ஒன்று நடைபெற்று வருவதாகக் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,
"நுரைச்சோலை மின் நிலையத்தின் 1 ஆம் இலக்க மின் உற்பத்தி இயந்திரம் பராமரிப்புப் பணிகளுக்காக 61 நாட்கள் மூடப்பட்டிருந்தது. அதாவது ஜூலை 30 முதல் ஓகஸ்ட் மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த ஒன்றே இதுவாகும். அடுத்ததாக, இந்த செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் இவற்றில் புதிய நிலக்கரியே பயன்படுத்தப்படுகிறது. எனவே அந்தச் குற்றச்சாட்டுகள் எவற்றுக்கும் இதனுடன் தொடர்பில்லை. ஏனெனில் நுரைச்சோலை மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழப்பது என்பது அவ்வப்போது நிகழ்வதாகும். இப்போது அது இந்த நிலக்கரியின் தரம் தொடர்பில் இணைக்கப்படுகிறது. அத்தகைய பிரச்சினை எதுவும் இல்லை, ஏனெனில் இந்த மின் உற்பத்தி இயந்திரம் இரண்டு மாதங்களாக பராமரிப்புப் பணிகள் காரணமாக மூடப்பட்டிருந்த ஒன்றாகும். அதன் பின்னர் செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் புதிய கப்பல்களில் வரும் நிலக்கரியே பயன்படுத்தப்படுகிறது. நாளைக்குப் பின்னர் இது இயல்பு நிலைக்குத் திரும்பும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்துடன் இந்த முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் எவ்வாறு பழுதடைந்தது என்பது குறித்து தற்போது உள்ளக விசாரணை ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது." என்றார்.
































