Oct 21, 2026 - 06:09 AM

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ் மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழ்வு பிரதேசமாக உருவாகும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தொகுப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மழையின் அளவு இன்று (21) முதல் வரவிருக்கும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வுகூறல்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து மீனவர்கள், கடலோரச் சமூகத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இதற்கிடையில், கொந்தளிப்பான கடல் பகுதிகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று காலை 4.15 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது இன்று காலை 10.15 வரை செல்லுபடியாகும்.
காங்கேசன்துறையில் இருந்து கற்பிட்டி, கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அத்தருணத்தில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, அத்தகைய கடற்பரப்புகளில் தமது நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
































