Oct 21, 2026 - 02:04 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அம்பேவெல மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பெருமளவு அதிகரித்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியாவில் பெய்த கனமழையினால் நேற்று (20) பிற்பகலில் அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் வான் கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தில் கலக்கும் ஆக்ராஓயா ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், லிந்துலை காவல் துறைப் பிரிவுக்குட்பட்ட மெரயா மற்றும் தங்கக்கலை தோட்டப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
அதேவேளை, அம்பேவெல பகுதியில் பெய்த கனமழையினால் அம்பேவெல தொடருந்து நிலையமும், நுவரெலியா - அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதியும் தொடருந்து பாதையும் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக அப்பாதையூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டதாக அம்பேவெல தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி, இன்று (21) காலை முதல் வான் மேவிப் பாய்கிறது.
இதன் காரணமாகக் களனி ஆறு மற்றும் கேசல்கமு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆற்றைப் பயன்படுத்துபவர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
































