Oct 21, 2026 - 01:22 PM

46,460,000 ரூபாய் பெறுமதியான 'குஷ்' (Kush) போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (21) அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய மியான்மர் நாட்டவராவார். இவர் அந்நாட்டில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.
சந்தேகநபர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரத்திலிருந்து 'தாய் எயார்வேஸ்' (Thai Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானத்தின் மூலம் கட்நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பைகளில் ஆடைகள், இனிப்புகள் மற்றும் உணவுகளுக்கு இடையே 4 கிலோ 646 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருளை 3 பொதிகளில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த விமானப் பயணியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காகக் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
































