Oct 27, 2026 - 09:29 PM

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், நவீன சீனக் குடியரசின் நிறுவுனராகவும் இருந்த மாவோ சேதுங் (Mao Zedong) குறித்து கிண்டலாகப் பேசியதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரமும் ரியல் மெட்ரிட் அணியின் முன்னணி வீரருமான கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) பகிரங்க மன்னிப்புப் கோரியுள்ளார்.
சமீபத்தில் வைரலான காணொளி ஒன்றில், மாவோ சேதுங்கின் படத்தில் தனது முகம் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மீம் (Meme) ஒன்றை சுட்டிக்காட்டிய எம்பாப்பே, "சீன சர்வாதிகாரி ஒருவரின் படத்துடன் எனது முகம் இணைக்கப்பட்டிருந்த இணைய மீம் தான் நான் பார்த்ததிலேயே மிகவும் வேடிக்கையானது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மாவோ குறித்த கேலி சித்திரங்கள் மற்றும் விமர்சனங்கள் கடுமையாக விலக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படும் நிலையில், எம்பாப்பேயின் இந்த கருத்து சீன மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தனது தவறை உணர்ந்த எம்பாப்பே, "எனது கருத்து கவனக்குறைவாகத் தெரிவிக்கப்பட்ட ஒன்றாகும். இது சீனாவிலும் உலகெங்கிலும் உள்ள சீன சமூகங்களைச் சேர்ந்த பலரது மனதைப் புண்படுத்தியுள்ளது என்பதை நான் உணர்கிறேன். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்" என பிரெஞ்சு, சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, எம்பாப்பேயின் இந்த தனிப்பட்ட கருத்திற்கு ஸ்பெயினின் லா லிகா (La Liga) கால்பந்து நிர்வாகமும் தனது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்து மன்னிப்புப் கோரியுள்ளது.
எப்படியிருப்பினும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சீனா மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற விளையாட்டு பான நிறுவனமான 'டொங்பெங்' (Dongpeng), பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'மெங்நியூ' (Mengniu) மற்றும் பாலாடைக்கட்டி தயாரிப்பு நிறுவனமான 'மில்க்கிரவுண்ட்' (Milkground) ஆகிய முக்கிய சீன நிறுவனங்கள் எம்பாப்பேயுடனான கோடி கணக்கிலான வர்த்தக ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்துள்ளன.
மேலும், இந்த விவகாரத்தின் எதிரொலியாக ஸ்பெயினின் 'லா லிகா' போட்டிகளின் ஒளிபரப்பைச் சீனாவின் அரச தொலைக்காட்சியான CCTV நிறுத்தி வைத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் (Guo Jiakun) இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தவொரு சொல்லும் செயலும் சீன சமூகத்தால் நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
































