Oct 27, 2026 - 10:05 PM

வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (27) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
புயலின் தற்போதைய நிலை
'அர்னாப்' (Arnab) என பெயரிடப்பட்டுள்ள இந்த மிகவும் சக்திவாய்ந்த புயல், இன்று பிற்பகல் 2.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து வடகிழக்கே சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீவிரப் புயலானது நாளை (28) அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசப் பகுதி ஊடாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது காற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோமீற்றர் வரை காணப்படக்கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் இது மணிக்கு 150 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 150 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
குறித்த கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் 6 முதல் 9 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
































