Nov 2, 2026 - 11:18 PM

"பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு" பற்றிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் உத்தியோகபூர்வமற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் வெளியிடும் நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் இன்று (02) பத்தரமுல்லையில் நடைபெற்றது.
ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அன்று நினைவு கூரப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 ஆம் இலக்கத் தீர்மானத்தின் 26 வது ஆண்டு நிறைவுக்குச் சமாந்தரமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைதிக்கான பாதைகள் (Pathways to Peace) அமைப்பினால் இலங்கையிலுள்ள கனடாவின் உயர்ஸ்தானிகராலயம் தலைமையிலான கனடா அரசாங்கத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மொழிபெயர்ப்புகளின் அச்சிடப்பட்ட பிரதிகளும் இதன்போது கையளிக்கப்பட்டன.
பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சி நிரல் (Women, Peace and Security Agenda) என்பது ஆயுதமேந்திய மோதல்கள் மற்றும் யுத்த சூழ்நிலைகளில் பெண்களும் பெண் பிள்ளைகளும் எதிர்கொள்ளும் விசேட சவால்களை அடையாளம் கண்டு, அமைதியை ஏற்படுத்துதல், மோதல்களைத் தடுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயல்பாடுகளில் பெண்களின் சமமான மற்றும் தீவிர பங்கேற்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட சர்வதேசக் கொள்கைக் கட்டமைப்பாகும்.
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 ஆம் இலக்கத் தீர்மானத்தின் மூலம் மோதல்களைத் தடுத்தல், மோதல்களைத் தீர்த்தல், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் செயல்பாடுகளில் பெண்களின் பங்கு மற்றும் பங்கேற்பு வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் ஆயுத மோதல்களின் போது பெண்களையும் பெண் பிள்ளைகளையும் பாதுகாத்தல், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் பெண்களின் தேவைகளைக் கவனத்தில் கொள்வதும் இந்த நிகழ்ச்சி நிரலின் முக்கிய நோக்கங்களில் அடங்கும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், சர்வதேசக் கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் பற்றிய அறிவை மொழி தடங்கலின்றி அனைவரும் பெறக்கூடியதாக இருப்பது, பெண்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை விரிவுபடுத்தவும், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாடுகளில் பெண்களின் தீவிர பங்களிப்பை உயர்த்தவும் ஒரு முக்கிய படியாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், மொழி அறிவுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும், விழிப்புணர்வு, சமத்துவம் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் வலியுறுத்தினார்.
































