Nov 2, 2026 - 09:34 PM

கடவத்தை - மஹகடை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயதுச் சிறுவனின் தாய், தனது பிள்ளைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கும் சென்று முறைப்பாடு செய்ய எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தனது பிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், இன்னமும் அவரது உடலில் தோட்டாத் துண்டுகள் உள்ளதாகவும், இதனால் அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"எனது பிள்ளைகாக நீதி கோரியே இதனைச் செய்கிறேன். காலையில் கம்பஹா பொலிஸுக்குச் சென்றேன். அங்கு இருந்த அதிகாரிகளுடன் பேசினேன். அவர்கள் நியாயமான முறையில் பேசினார்கள். அதன் பிறகு கடவத்தை பொலிஸுக்கு வந்தேன். அவர்கள் என்னிடம் வாக்குமூலம் பெற்றார்கள். வாக்குமூலம் எடுத்து முடித்ததும் நான் கூறினேன், துப்பாக்கிச் சூடு நடத்த T-56 துப்பாக்கியைக் கொடுக்கும் போது, அனுபவமுள்ள ஒருவருக்கே அதைக் கொடுக்க வேண்டும். சும்மா போகிற வருகிற பைத்தியக்காரர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தக் கொடுத்துச் சரியாகாது. துப்பாக்கிச் சூடு நடத்துவதானால் இரண்டு சக்கரங்களுக்கு நடத்த வேண்டும். இல்லையென்றால் முழங்காலுக்குக் கீழே நடத்த வேண்டும். இது ஒரு மனிதனைக் கொல்ல நினைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியது போல் உள்ளது. இன்னும் கொஞ்சம் அங்கிமிங்கும் நகர்ந்திருந்தால் எனது பிள்ளையின் உயிரே போயிருக்கும். இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் பிள்ளையின் உடலுக்குள் தோட்டாத் துண்டுகள் உள்ளன. முழுமையாக அகற்றப்படவில்லை. அப்படி இருக்கும் போது எனது பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும்? எனது பிள்ளை விளையாட்டுகளில் ஈடுபடுகிறான். அங்கம்போர தற்காப்புக் கலை செய்கிறான். தடகளப் போட்டிகளில் பங்கேற்கிறான். வோலிபோல் விளையாடுகிறான். அவற்றை இனிமேல் தொடர முடியுமா என்பது எனக்குக் கேள்வியாக உள்ளது. இந்த எல்லாப் பக்கங்களையும் ஆராய்ந்து எனது பிள்ளைக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும்." என்றார்.
































