Nov 2, 2026 - 10:09 PM

எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை அந்த இலக்கத்தைப் பெறாத பெருந்திரளான மக்கள் இன்று (02) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
இதன் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும் பிராந்திய அலுவலகங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
அத்துடன், TIN இலக்கத்தைப் பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையம் வழியே விண்ணப்பிக்க முயன்றதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் தடங்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, பராமரிப்புப் பணிகளுக்காக அந்த இணையத்தளம் தற்காலிகமாகச் முடக்கப்பட்டிருந்தது.
வங்கி கணக்கு திறத்தல், வாகனம் பதிவு செய்தல், வருமான உரிமத்தைப் புதுப்பித்தல் மற்றும் வணிகத்தைப் பதிவு செய்தல் உள்ளிட்ட எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு நவம்பர் 01 ஆம் திகதி முதல் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்தீர்மானத்தைத் தொடர்ந்து TIN இலக்கத்தைப் பெற பெருந்திரளான மக்கள் வருகை தருவது குறித்து கருத்துத் தெரிவித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான நந்தன குமார, தேவை ஏற்படுபவர்கள் மட்டுமே TIN இலக்கத்தைப் பெறுவதற்கு உரிய அலுவலகங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"2026 நவம்பர் மாதம் முதல் திகதி முதல் எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் TIN இலக்கத்தைப் பெற வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை 2024 ஜனவரி முதல் திகதி முதலே நடைமுறையில் உள்ளது. TIN இலக்கத்தைப் பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கோ அல்லது பிராந்திய அலுவலகத்திற்கோ வருகை தரும் போது, குறிப்பிட்ட எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு அந்த இலக்கம் அத்தியாவசியமாகத் தேவைப்படும் நபர்கள் மட்டுமே உரிய பிரிவுகளுக்குச் செல்லுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
எப்படியிருப்பினும், ஏனைய நபர்களுக்கான TIN இலக்கம் வழங்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதனால் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை. அலுவலகப் பணிகளை இலகுவாக நிர்வாகம் செய்வதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். ஒருவர் வருமான உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு TIN சான்றிதழின் பிரதியைச் சமர்ப்பிக்க முடியும். எனவே, திணைக்களத்தினால் வழங்கப்பட்ட TIN சான்றிதழைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, உரிய நிறுவனங்களில் சமர்ப்பிக்கும் போது அதன் பிரதியைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.
































