Nov 5, 2026 - 07:28 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் வகையில் புதிய இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பஸ் சேவை இன்று (05) ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவினால் இந்தப் புதிய பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹட்டன் இ.போ.ச. டிப்போவும், காரைநகர் இ.போ.ச. டிப்போவும் இணைந்து இந்தப் பஸ் சேவையை முன்னெடுக்கின்றன.
இதன்படி, தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பஸ் புறப்படும். அதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து ஹட்டன் நோக்கி பிற்பகல் 4.45 மணிக்கு மற்றைய பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தப் பஸ் சேவைக்கான ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ளும் வசதியும் பயணிகளுக்கு வழங்கப்படுமென ஹட்டன் இ.போ.ச. டிப்போ முகாமையாளர் பாலித வீரசூரிய தெரிவித்தார்.
புதிய பஸ் சேவையின் முதலாவது பயணத்தில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்வதற்காக அதிகளவான பயணிகள் திரண்டிருந்தனர்.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஹட்டன் இ.போ.ச. டிப்போ முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்கள், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் இணைந்து டிக்கோயா வனராஜா தோட்டத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
































