Nov 6, 2026 - 08:04 PM

சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகளின் நெருக்கடியைக் குறைப்பது தொடர்பாகக் கண்டறிவதற்காக, பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (6) சில சிறைச்சாலைகளுக்கு விசேட கள விஜயம் மேற்கொண்டனர்.
இதன்படி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, புதிய மெகசின் சிறைச்சாலை, பெண்கள் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகிய வளாகங்கள் இதன்போது பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இந்த விஜயத்தின் போது, சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி, சமையலறைச் செயற்பாடுகள், மருத்துவ வசதிகள், அபாயகரமான கட்டடங்கள் உட்பட ஒட்டுமொத்த கட்டடங்களின் நிலைமை, வடிகால் அமைப்புகள், மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான வசதிகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.
பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் இடம்பெற்ற இந்த கள விஜயத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், துஷாரி ஜயசிங்க மற்றும் ஜி.டீ. சூரியபண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள், பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆர். பிரசாத் ஹேமந்த குமார உள்ளிட்ட சிறைச்சாலைத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
































