Nov 11, 2026 - 12:15 PM

200 க்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்கள் பிரதான துறைகளில் முதலீட்டு உரையாடல்களில் ஈடுபட்டனர்
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், நவம்பர் 4 ஆம் திகதி சென்னை Hyatt Regency ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்கள் மாநாடு, புதிய முதலீட்டு வாய்ப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் எல்லை கடந்த தொழில் பங்காண்மைகளுக்கான புதிய வழிகளை ஆராய்ந்தது.
சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராலயத்தினால், கொழும்பு துறைமுக நகரத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், சரக்குக் கையாளல்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்துறைகள் போன்றவற்றின் வணிகத் தலைவர்கள், இந்தியாவின் தொழிற்துறை சம்மேளனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர் பிரதிநிதிகள் என 200 க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இவர்கள் இரு நாடுகளுக்கும் வியாபார வாய்ப்புகளை தோற்றுவிக்கக்கூடிய வணிக ஈடுபாடுகள் பற்றி ஆராய்ந்திருந்தனர். அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டுமான இந்த உச்சிமாநாடு, இந்தியாவில் கொழும்பு துறைமுக நகரம் நடத்திய முதலாவது முதலீட்டாளர் மாநாடாகும். இது இந்திய வணிக மற்றும் முதலீட்டுச் சமூகத்துடனான தொடர்புகளை மேலும் ஆழமாக்குவதற்கும், நீண்டகால இருதரப்பு பொருளாதார உறவுகளை உண்மையான வணிக வாய்ப்புகளாக மாற்றுவதற்குமான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.
இந்நிகழ்வின் ஆரம்ப உரையை, தென் இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி. கணேசநாதன் கேதீஸ்வரன் ஆற்றியிருந்தார். தமது உரையில், “இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் புவியியல், வரலாறு மற்றும் வர்த்தகப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்த உறவு எப்போதையும் விட வலுவாக உள்ளது. அதிகப்படியான வணிக ஈடுபாடு மற்றும் முதலீடுகள் மூலம் இந்த உறவுகளை மேலும் ஆழமாக்குவதற்கு விரிவான வாய்ப்புகள் உள்ளன. வலுவான தொழிற்துறைத் தளத்தையும் தொழில் முனைவோர் சூழலையும் கொண்டுள்ள சென்னை நகரம், இந்த உரையாடலுக்கான ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த மாநாடு, எமது இரு நாடுகளின் வணிக நிறுவனங்களுக்கு இடையே நீடித்த பங்காண்மைகளை உருவாக்கவும், பகிர்ந்தளிக்கப்பட்ட வாய்ப்புகளை அர்த்தமுள்ள பொருளாதார வெளிப்பாடுகளாக மாற்றவும் உதவும் என்று நாம் நம்புகிறோம்.” என்றார்.
இந்திய வணிக நிறுவனங்கள் தங்களின் உள்நாட்டுத் தளத்தை விட்டு வெளியேறாமல் தமது திறன்களையும் சந்தை அணுகலையும் விரிவுபடுத்த உதவும் வகையில், “வலுவூட்டப்பட்ட இந்தியாவின் வளர்ச்சிப் பாதை: ஏன் இலங்கை, ஏன் இப்போது?” (India's Growth Story, Strengthened: Why Sri Lanka, Why Now) என்பது இந்த மாநாட்டின் மையப் பொருளாக அமைந்தது. இந்தியாவுக்கு மிக அருகில் இலங்கை அமைந்திருத்தல், ஒரே நேர வலயத்தைப் பகிர்ந்துகொள்ளுதல், பண்பாட்டு ஒற்றுமைகள் மற்றும் நிறுவப்பட்ட வணிக மற்றும் சட்ட நிறுவனங்களைக் கொண்டிருத்தல் ஆகியவை பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்குச் சேவையாற்ற விரும்பும் வணிகங்களுக்கு நடைமுறைச் சாதகங்களை வழங்குகின்றன. இவ்வுரையாடல்களில் ரியல் எஸ்டேட், தயாரிப்புப் பொறியியல், திறைசேரி, தரவு பகுப்பாய்வு, இணையப் பாதுகாப்பு மற்றும் BPO ஆகிய துறைகளுடன், தரவு மையங்கள், தொழில்நுட்பம், AI மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகளிலான வாய்ப்புகளும் ஆராயப்பட்டன. மேலும், முதலீட்டு வசதியாக்கம் மற்றும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய சீரான ஒழுங்குமுறைச் சூழல் ஆகியவை இலங்கையைத் தங்களின் பிராந்திய விரிவாக்க உத்திகளின் ஒரு பகுதியாக மதிப்பிடும் வணிக நிறுவனங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தவிசாளர் ஹர்ஷ அமரசேகர ஜனாதிபதி சட்டத்தரணி கருத்துத் தெரிவிக்கையில், “முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, ஒரு முன்மொழிவின் பலமானது அது வழங்கும் வாய்ப்பில் மட்டும் அல்லாமல், அவர்கள் இயங்கும் சட்டக் கட்டமைப்பின் தெளிவு மற்றும் உறுதியில் தங்கியுள்ளது. கொழும்பு துறைமுக நகரம், ஒரு சட்டப்பூர்வ கட்டமைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்பு விதிகள் மூலம் அந்தத் தெளிவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமது சந்தை அணுகலை விரிவுபடுத்த விரும்பும் இந்திய வணிக நிறுவனங்களுக்கு, இலங்கை மிகவும் அருகாமை, அறிமுகமான சூழல் மற்றும் பரந்த பிராந்திய வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை வழங்குகின்றது. இது வணிகத் திறன்களை விரிவுபடுத்துவதையும், வளர்ச்சியின் முதன்மை மையத்தை இந்தியாவில் தக்கவைத்து, ஒரு மேலதிகப் பங்காளராக புதிய சந்தைகளைச் சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் கொழும்பு துறைமுக நகரம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாகும் என்பதையும், இத்திட்டத்தின் மீதான அரசாங்கத்தின் தீவிர அக்கறையை இது கோடிட்டுக் காட்டுகிறது என்பதையும் குறிப்பிட்டார்.
CHEC போர்ட் சிட்டி கொழும்பு பிரைவட் லிமிடெட் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் துல்சி அலுவிஹார குறிப்பிடுகையில், இலங்கையின் ஒரே வெளிநாட்டு நாணயக் பெயரிடப்பட்ட சிறப்புப் பொருளாதார வலயமாக கொழும்பு துறைமுக நகரம் வகிக்கும் நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு சர்வதேச வணிக மற்றும் முதலீட்டு மையமாக அதன் முன்மொழிவை விளக்கியிருந்தார். மேலும், ஒற்றைச் சாளர அனுமதிச் செயல்முறை (Single-Window Approval Process), முதலீட்டாளர் பாதுகாப்பு விதிகள், சீராக்கல் பொறிமுறை, சர்வதேச மத்தியஸ்த விதிகளுக்கான ஏற்பாடுகள் (International Arbitration Provisions), 100% வெளிநாட்டு உரிமை மற்றும் இந்திய ரூபாய் உள்ளிட்ட 16 வெளிநாட்டு நாணயங்களில் பணப்பரிவர்த்தனைகளைச் மேற்கொள்ளும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய, இந்த வலயத்திற்கு அடிப்படையாக இருக்கும் சட்டப்பூர்வ சட்டக் கட்டமைப்பை பற்றியும் அவர் விளக்கமளித்தார்.
TVS Vehicle Mobility Solutions பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் சர்வதேச வணிக அபிவிருத்திக்கான CII SR Taskforce தவிசாளர் மது ரகுநாத், JLL இந்தியா மற்றும் இலங்கை மூலோபாய ஆலோசனை மற்றும் பெறுமதி மற்றும் இடர் ஆலோசனை, சிறப்பு நிலைய தலைமை அதிகாரி மற்றும் சிரேஷ்ட பணிப்பாளர் ரொபின் எஸ், அமரசேகர மற்றும் CHEC போர்ட் சிட்டி கொழும்பு பிரைவட் லிமிடெட் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் துல்சி அலுவிஹார ஆகியோர் குழுநிலை கலந்துரையாடலில் பங்கேற்று, துறைசார் வாய்ப்புகள், ஒழுங்குபடுத்தல் வசதியளிப்புகள் மற்றும் வியாபார பங்காண்மைகளுக்காக காணப்படும் வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்திருந்தனர்.
JLL இந்தியா மற்றும் இலங்கை மூலோபாய ஆலோசனை மற்றும் பெறுமதி மற்றும் இடர் ஆலோசனை, சிறப்பு நிலைய தலைமை அதிகாரி மற்றும் சிரேஷ்ட பணிப்பாளர் ரொபின் எஸ் கருத்துத் தெரிவிக்கையில், “உள்நாட்டுச் சந்தைக்கு அப்பால் புதிய வாய்ப்புகளை ஆராயும் இந்திய வணிக நிறுவனங்களுக்கு, புவியியல் அருகாமை, இலகுவான வணிகச் சூழல் மற்றும் புதிய வளர்ச்சிச் சந்தைகளுக்கான அணுகல் ஆகியவை முக்கியமான பரிசீலனைகளாகும். ஒரு தெளிவான ஒழுங்குமுறைச் சட்டக் கட்டமைப்பு மற்றும் வெளிப்படையான ஊக்குவிப்புச் சலுகை முறைமை ஆகியவை, கொழும்பு துறைமுக நகரத்தின் மீது இந்தியாவிடமிருந்து தீவிர ஆர்வத்தைப் பெறுவதற்கான முக்கிய கூறுகளாக அமைந்துள்ளன. அத்துடன் இதுவரை நடைபெற்றுள்ள உரையாடல்கள் அந்த ஆர்வம் மேலும் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன.” என்றார்.
சென்னையில் நடைபெற்ற இந்த முதலீட்டாளர்கள் மாநாடு, இந்திய வணிக மற்றும் முதலீட்டுச் சமூகத்துடனான தொடர்புகளை மேலும் ஆழமாக்குவதற்கான கொழும்பு துறைமுக நகரத்தின் முயற்சிகளில் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறிக்கின்றது. எதிர்காலத்திலும், சாத்தியமான எல்லை கடந்த தொழில் பங்காண்மைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும், முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறப்பதற்கும் தொடர்ச்சியான உரையாடல்கள் முன்னெடுக்கப்படும்.
கொழும்பு துறைமுக நகரம் பற்றி: கொழும்பு துறைமுக நகர் என்பது தெற்காசியாவில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச வணிக மற்றும் வாழ்க்கைமுறை மையமாக உத்தேசிக்கப்பட்ட ஒரு நவீன, முதன்மைத் திட்டமிட்ட நகர அபிவிருத்தியாகும். பிரதான கிழக்கு-மேற்கு கடல்வழிப் பாதையில் 269 ஹெக்டெயர் பரப்பளவில் விரிந்துள்ள இது, வெளிநாட்டு நாணயங்களைச் செயலாக்கும் இலங்கையின் முதலாவது பன்முகச் சேவை சிறப்புப் பொருளாதார வலயமும் (SEZ), நாட்டின் மிகப்பெரிய அரச-தனியார் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டமுமாகும். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் இத்திட்டம், சர்வதேச தரத்திற்கு இணையான சட்டதிட்டங்கள், வலுவான முதலீட்டாளர் பாதுகாப்பு, எளிதான வணிகச் சூழல் மற்றும் போட்டித்தன்மை மிக்க நிதி மற்றும் நிதிசாரா சலுகைகளை வழங்கும் ஒரு பிரத்தியேக ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் இயங்குகிறது. உயர் மதிப்புமிக்க நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரம், நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள், உலகளாவிய வர்த்தகம், கடல்சார் மற்றும் சரக்குகள், தொழில்முறைச் சேவைகள் மற்றும் பிராந்தியத் தலைமையகச் செயல்பாடுகள் உள்ளிட்ட துறைகளுக்கு வசதிகளை ஏற்படுத்துகிறது. இத்திட்டம் நிறைவடையும் போது, அண்ணளவாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இவ் அபிவிருத்தியானது இலங்கைக்கு குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் www.portcitycolombo.lk
































