Nov 12, 2026 - 10:08 PM
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த கடும் மழையைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மண் திட்டுக்கள் சரிந்து வீடுகள் மீது வீழ்ந்துள்ளன.
இதன்போது, வீடொன்றில் இருந்த ஒருவர் மண்ணில் சிக்குண்டு காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், அங்கு வசித்து வந்த குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
































