Nov 12, 2026 - 10:55 PM

நாட்டில் 22 மில்லியன் மக்கள் முகங்கொடுத்துவரும் பாரிய பிரச்சினைகளுக்கு குறித்த வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமை, பணவீக்கம் உயர்வடைந்துள்ளமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற மக்களின் ஜீவனோபாயப் போராட்டத்திற்கு இவ்வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை எனவும், வறுமை ஒழிப்புத் திட்டமோ தெளிவான பதில்களோ இதில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐந்த மணிநேரம் ஜனாதிபதி உரையாற்றியிருந்தாலும், இது தீர்வு இல்லாத பாதீடே என்பதே தமது கருத்து எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் கல்வி கற்ற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் மிக அதிகமாகக் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) குறிப்பிடுகின்றது. 43 சதவீதத்தினருக்குத் தொழில் இல்லாமை போலவே, நாட்டின் வறுமை நிலை 60 சதவீதத்திற்கும் அதிகமாகக் காணப்படுவதாக உலக வங்கி குறிப்பிடுகிறது. ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு இந்த அரசாங்கத்தால் முடியாதுபோயுள்ளதுடன், இவ்வரவு செலவுத் திட்டத்தில்கூட வறுமையை ஒழிப்பதற்கான பிரயோக ரீதியான எந்தவொரு வேலைத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கி, 40 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீத பங்களிப்பை வழங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு எந்தவொரு சாதகமான வேலைத்திட்டமும் நிவாரணமும் இதில் வழங்கப்படவில்லை. வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அவை வழக்கமான வங்கி முறைமையினூடாகவே வழங்கப்படுவதால், பாதுகாப்புள்ள நபர்களுக்கு மாத்திரமே பணம் கிடைக்கிறது.
இளம் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், அதற்கு அவசியமான ஆரம்ப மூலதனமும் (Initial Capital) செயற்பாட்டு மூலதனமும் (Working Capital) வழங்கப்படவில்லை.
ஜனாதிபதி முன்வைத்த புள்ளிவிபரங்களின் பிரகாரம்கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து, பணவீக்கம் அதிகரித்து வருவதையே இது காட்டுகின்றது. உலகின் பல நாடுகளிலும் நாளாந்த ஜீவனோபாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதைப் போன்று, இதே நிலைமை நமது நாட்டிற்கும் ஏற்பட்டு வருகின்றது. எனவே, ஜனாதிபதி 5 மணித்தியாலங்கள் ஆற்றிய உரையானது எந்தத் தீர்வுகளுமற்ற, மனிதநேயமற்ற, 'கிளிப்பிள்ளை' போன்றதொரு வரவு செலவுத் திட்டமே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
































