Nov 13, 2026 - 04:19 PM

பிரபல பின்னணி பாடகர்களான சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
விஜய் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஆகிய இருவரும் இணைந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு இசைக்கச்சேரிகளில் பாடி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
தனது 7 ஆவது வயதில் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சியில் அறிமுகமான ஸ்ரீநிஷா, தனித்துவமான குரலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் 'அவன் இவன்' படத்தில் இடம்பெற்ற 'ஒரு மலையோரம்' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
அதேநேரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற சாம் விஷால், அனிருத் இசையில் 'மாஸ்டர்' திரைப்படத்தின் தெலுங்குப் பாடலான 'சிட்டி ஸ்டோரி' மூலம் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, சொந்தமாகப் பாடல்களை எழுதி இசையமைத்து வெளியிடும் சுயாதீன கலைஞராகவும் வலம் வருகிறார்.
இசைப் பயணத்தில் இணைந்த இவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நிச்சயதார்த்தப் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிஷா, "விஷ் மோட் 11:11" (Wish mode 11:11) என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
வாழ்க்கையில் இணையவுள்ள இந்த இசை ஜோடிக்குத் திரையுலகப் பிரபலங்களும் இசை ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
































