Nov 13, 2026 - 05:43 PM

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எந்தவித முடிவும் சமநிலையில் (Draw) நிறைவடைந்துள்ளது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளின் துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கடைசி வரை விறுவிறுப்பாகச் சென்ற போட்டி சமனில் முடிந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 434 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
அந்த அணியில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 93 ஓட்டங்களையும், தையிப் ஆரிப் 57 ஓட்டங்களையும், அராபத் மின்ஹாஸ் 52 ஓட்டங்களையும், பாபர் அசாம் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கைப் பந்துவீச்சுத் தரப்பில் அசித பெர்னாண்டோ மற்றும் டில்ஷன் மதுஷங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 117.2 ஓவர்களில் 446 ஓட்டங்களைக் குவித்து 12 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
அணியின் தூணாக நின்று ஆடிய தனஞ்சய டி சில்வா 167 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 119 ஓட்டங்களையும் விளாசினர்.
இவர்களுடன் கமிந்து மெண்டிஸ் 58 ஓட்டங்களையும் லஹிரு உதார 42 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் அபாரமாகச் செயல்பட்ட சாகிப் கான் 130 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
12 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஆட்ட நேர முடிவில் 84.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டி சமநிலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடிய சவுத் ஷகீல் 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து நூழிலையில் சதத்தைத் தவறவிட்டார்.
இலங்கைப் பந்துவீச்சுத் தரப்பில் மிலான் ரத்நாயக்க 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் அபாரமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் சாகிப் கான் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
































