Nov 13, 2026 - 08:33 PM

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராக கோட்டை நீதவான் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு தொடர்பில், ஆரம்பத்திலேயே இதனுள் வழக்குக்கான முகாந்திரம் உள்ளதா என்பது குறித்த தனது தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) அறிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பான ஆரம்பக் கட்டக் கருத்துக்கள் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பரிசீலிக்கப்பட்டு நிறைவுக்கு வந்ததைக் தொடர்ந்தே இந்தத் தீர்ப்புத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமர்வின் போது, பிரதிவாதியான விமல் வீரவங்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதிச் சட்டத்தரணி அனுர மத்தேகொட,
"அத தெரண' உள்ளிட்ட சில யூடியூப் காணொளிகளில், 'ஷானியின் வதைமுகாமிற்குள் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்' என்றே எனது சேவை பெறுநர் குறிப்பிட்டார். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக வெளியிட்ட தடுப்புக் காவல் உத்தரவு குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் சாதாரண சட்டத்தின் கீழ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கூறினார். குறித்த எந்தவொரு யூடியூப் காணொளியிலும் அவர் நீதிமன்றம் அல்லது நீதிபதி பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. அவ்வாறிருக்கையில், 2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றங்களை அவமதித்தல் சட்டத்தின் கீழ் அவர் அவமதிப்பைச் செய்ததாக எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? எனவே, எனது சேவை பெறுநருக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது" என தமது வாதங்களை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார,
" அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான இரண்டு உத்தரவுகளை நீதவான் பிறப்பிக்கவிருந்த வேளையிலேயே பிரதிவாதிகள் இந்தச் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைப்பது தொடர்பான விவகாரத்தில், கடந்த ஜூன் 10 மற்றும் ஜூலை 01 ஆம் திகதிகளில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு உத்தரவுகள் வெளியிடப்படவிருந்தன. அவ்வாறிருக்கையில், பிரதிவாதிகள் ஜூன் 7 க்கும் ஜூன் 15 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்." என தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல்,
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குறிப்புகளைச் சமர்ப்பித்ததன் பின்னர், அந்த உரைத் தரவுகளின் தொகுக்கப்படாத காணொளிகளை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்ததாகத் தெரிவித்தார். அத்துடன், சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகள் தொடர்பில் கணினி குற்ற விசாரணைப் பிரிவு ஊடாக அறிக்கை ஒன்றை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், காணொளிகள் மற்றும் சமூக வலைத்தள அறிக்கைகளைக் பரிசீலித்து, பிரதிவாதிகள் நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளனர் என்பது ஆரம்ப நிலையிலேயே தெளிவாகிறது என்று உறுதிப்படுத்திய பின்னரே நீதவான் இந்த முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்போது, மற்றுமொரு பிரதிவாதியான திலீத் ஜயவீர சார்பில் ஆஜரான ஜனாதிபதிச் சட்டத்தரணி அலி சப்ரி,
"எனது சேவை பெறுநர் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகத் தானாக முன்வந்து எந்தத் முடிவையும் எடுக்கவில்லை. பிரதிவாதிகள் வெளியிட்ட கருத்துக்களினால் விசாரணை அதிகாரிகளுக்கும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் அழுத்தங்கள் ஏற்படுவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த கருத்துக்களைப் பரிசீலித்த பின்னரே அவர் இந்தத் முடிவுக்கு வந்தார்" எனத் தெரிவித்தார்.
இதன்போது, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தில் அங்கம் வகிக்கும் நீதியரசர் ஆதித்ய படபெந்திகே, பிரதி சொலிசிட்டர் ஜெனரலிடம் பின்வரும் கேள்வியை எழுப்பினார்:
"இங்கு சில பிரதிவாதிகள் தாங்கள் நீதிமன்றம் அல்லது நீதிபதி குறித்து எதனையும் குறிப்பிடவில்லை என்றும், ஷானியின் வதைமுகாம் பற்றிக் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது என்றும் கூறுகின்றனர். இது குறித்து உங்களது கருத்து என்ன?"
அதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல்,
"பொலிஸாரோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை நீதவான் நேரில் பார்வையிடுவது என்பது நீதித்துறைச் செயற்பாட்டின் ஒரு பகுதியாகும்" எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாடு தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், எழுத்துமூல சமர்ப்பணங்கள் எவையேனும் இருப்பின் அவற்றை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
அதற்கமைய, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலீத் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாட்டில் ஆரம்ப நிலையிலேயே வழக்குக்கான முகாந்திரம் உள்ளதா என்பது குறித்த தனது தீர்ப்பை ஜனவரி 12 ஆம் திகதி வழங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தியோகபூர்வமாகத் திகதியிட்டுள்ளது.
































