Nov 15, 2026 - 04:49 PM

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 10.11.2026 ஆம் திகதி ஆரம்பமானது.
ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று, முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்களில் சூரசம்ஹாரம் இடம்பெற்றது.
அந்தவகையில், மலையகத்தில் ஹட்டன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று (15) நடைபெற்றது.
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று, முருகப் பெருமான் உள்வீதி வலம்வந்து, பின்னர் சூரபத்மனுடன் போரிடுவதற்காக வெளிவீதிக்குச் சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது.
ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய முன்றலிலிருந்து ஹட்டன் நகர் மத்தி வரை இந்நிகழ்வுகள் கொண்டு செல்லப்பட்டு இடம்பெற்றன.
ஹட்டன் நகர் உட்பட அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இதன்போது பங்கேற்றதுடன், தங்களுடைய விரதத்தினையும் நிறைவேற்றிக் கொண்டனர்.
இதேவேளை, நாளை (16) காலை பாரணை, திருக்கல்யாணம், திருவூஞ்சல் என்பன இடம்பெறவுள்ளன.
































