Nov 15, 2026 - 08:08 PM

முக்கியப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகம் (CCIB) மேலும் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளது.
இலங்கையுடன் தொடர்புடைய பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ஷிரான் பாஸிக், கடந்த மார்ச் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு (BIA) வந்தடைந்ததும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் அவர் காவலில் எடுக்கப்பட்டார்.
அவரது ஆரம்பக் கைதுக்குப் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபரிடம் விசாரணை நடத்துவதற்காக 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவைப் பெற்றுக்கொண்டதுடன், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அவரை மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்ற விசாரணைப் பணியகம் அனுமதியை பெற்றுள்ளது.
ஆரம்பகால விசாரணைகளின் போது, துபாயில் உள்ள ஒரு சொகுசு வணிக வளாகத்துக்கு சென்றிருந்தபோது துபாய் காவல்துறையினரால் தான் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டதாக ஷிரான் பாஸிக் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் அவரது கைபேசி பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் வீடியோ காட்சிகள் சேமிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்ததை அடுத்து அவர்கள் தன்னைச் கைது செய்ததாகவும் அவர் கூறினார்.
ஈரானுடன் இணைந்திருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்து துபாய் அதிகாரிகள் தம்மிடம் கேள்வி எழுப்பியதாகவும், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கு முன்பு இலங்கைக்குச் செல்வதற்கு தனக்கான விமான டிக்கெட்டைத் தானே விலைக்கு வாங்குமாறு தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஷிரான் பாஸிக்கிற்கு எதிராக முன்னர் வெளியிடப்பட்ட இன்டர்போல் சிவப்பு அறிக்கை (Red Notice) திரும்பப் பெறப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இலங்கை அதிகாரிகள் அவருக்கு எதிராக புதிய சிவப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்காகத் தயாராகி வந்த வேளையில் அவர் துபாயில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் தகவல்களின்படி, ஷிரான் பாஸிக் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி சட்டப்பூர்வமாக இலங்கையிலிருந்து துபாய்க்குச் சென்றிருந்தார்.
அவர் துபாயில் இரண்டு வணிகங்களை நடத்திக்கொண்டே ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகப் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
அவர் நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் மற்றும் பிற குற்றச் செயல்களில் அவரது ஈடுபாடு குறித்த மேலதிக விசாரணைகளை இலங்கைச் சட்ட அமுலாக்க அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
































