Nov 15, 2026 - 08:39 PM

உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்வல்லுநர்களை ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டுவரும் Global Lankan Entrepreneur Club (GLEC) டிஜிட்டல் தளம் இன்று (15) கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
GLEC கருத்தாக்கத்தின் ஸ்தாபகரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜயவீரவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைத் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலீத் ஜயவீர, மக்களின் மனங்களில் தொழில்முனைவோர் கருத்தாக்கங்களை ஆழமாக விதைத்து நாட்டுக்குச் செல்வத்தை உருவாக்குவதே தமது பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்"தொழில்முயற்சியாண்மை (Entrepreneurship) என்ற சொல் கூட நமக்கு முற்றிலும் பரிச்சயமற்றதாக இருந்த ஒரு காலத்தில், 'அபே அரமுணு' அமைப்பு முன்னின்று உழைத்து, இக்கருத்தாக்கத்தை சமூகமயப்படுத்த சுமார் ஒரு தசாப்த காலமாக பல்வேறு வழிகளில் முயற்சித்தோம்.
இன்று தொழில்முயற்சியாண்மை என்பது பலரது நாவில் நடமாடும் முக்கிய சொல்லாக மாறியுள்ளது. நமது அறிஞர்கள், தொழில்வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் கூட இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
எனவே அது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். இந்த உரையாடல் என்பது வெறும் பேச்சளவில் நில்லாமல், மண்ணின் யதார்த்தமாக மாற்றக்கூடிய ஒரு நடைமுறைசார் வேலைத்திட்டமாகும்.
இங்கு நாம் முயற்சிப்பது இத்தளத்துடன் இணையும் அனைவருக்குமான சமமான வாய்ப்பை வழங்குவதாகும். உலகளாவிய தொழில்முனைவு குறித்த அறிவு, வாய்ப்புகள் மற்றும் அது தொடர்பான உண்மையான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதாகும்.
இன்று உலகின் தலைசிறந்த மற்றும் மிகவும் பிரகாசமான இலங்கைத் தொழில்முனைவோர்களை இந்த வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்ளவும், அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவும் எங்களால் முடிந்துள்ளது.
இன்று அறிமுகப்படுத்தப்படும் GLEC தளத்திற்கு வாருங்கள் என அழைக்கிறோம். ஏனெனில், நாம் நம்புவது என்னவென்றால், எவரும் நேரடியாக ஒரு பெரிய வர்த்தகராக இருப்பது மட்டுமே இங்கு அவசியமானதல்ல. மாறாக, மக்களின் மனங்களில் தொழில்முனைவோர் கருத்தாக்கத்தை ஏற்படுத்தி, தொழில்முனைவோர் மனப்பான்மை கொண்ட இலங்கையர்களை இலங்கைக்குள்ளும், இலங்கைக்கு வெளியேயும் உருவாக்கி, அதன் மூலம் நமது தாய்நாட்டுக்குச் செல்வத்தை உருவாக்கிக் கொடுப்பதே நமது நோக்கமாகும்." என்றார்.
































