Nov 15, 2026 - 05:42 PM
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்

மலையக மக்களுக்கு முறையான காணி உரிமையை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி, ஹட்டனில் இன்று (15) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகளின் ஏற்பாட்டில், ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மலையக மக்களுக்கு இதுவரை முறையான காணி உரிமை வழங்கப்படாமையினால் அவர்கள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
மலையக மக்கள் இன்றும் சொந்த முகவரியற்றவர்களாகவும், காணியற்றவர்களாகவும், சொந்த வீடுகளற்றவர்களாகவும் வாழ்ந்து வருவதால், ஏனைய சமூகத்தினருக்குக் கிடைக்கும் பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகளின் இணைப்பாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், மலையக மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதாக உறுதியளித்தே ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட கணேசலிங்கம் தெரிவித்தார்.
மேலும், மலையகப் பகுதிகளில் சுமார் 41 ஆயிரம் ஹெக்டேயார் பயிரிடப்படாத தரிசு நிலங்கள் காணப்படுவதாகவும், அவற்றை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் நீண்டகாலமாக நிலவிவரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்குக் காணிகளை வழங்குவதற்குப் பதிலாக, தனியார் துறையினருக்குக் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
எனவே, மலையக மக்களுக்கு உடனடியாக காணி உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தவறினால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், மலையக மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் இந்திய வம்சாவளி மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதாகவும், அன்று முதல் இன்றுவரை இம்மக்கள் பல்வேறு உரிமை மறுப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
மலையக மக்களின் வாழ்வாதாரம், சமூக அந்தஸ்து மற்றும் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு காணி உரிமை வழங்கப்படுவது அவசியம் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
இதன்போது, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
































