Nov 15, 2026 - 09:31 PM

நீரிழிவு நோய் குறித்த தேசிய மற்றும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் உலக நீரிழிவு தினத்துக்கு இணங்க, தாமரை கோபுரத்தை நீல நிறத்தில் ஒளிரச் செய்யும் விசேட நிகழ்ச்சி ஒன்று இலங்கை நீரிழிவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியின் தலைமையில் இந்த நிகழ்வு நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றது.
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் உலகளாவிய திட்டத்திற்கு இணங்க, உலக நாடுகள் பலவற்றிலும் பிரசித்தி பெற்ற சின்னங்கள் நீல நிற ஒளியால் ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையின் முக்கிய அடையாளமான கொழும்பு தாமரை கோபுரமும் அந்த சர்வதேச திட்டத்தில் இணைந்துகொண்டது.
நீரிழிவு நோய் குறித்த சமூக விழிப்புணர்வை அதிகரிப்பது, நோயை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்துவது மற்றும் அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த மக்களை ஊக்குவிப்பது ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, நீரிழிவு என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கக்கூடிய தீவிரமான தொற்றா நோயாகும் என வலியுறுத்தினார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயின் ஆரம்ப கட்டத்தில் தெளிவான அறிகுறிகள் தென்படுவதில்லை என்பதால், முறையான சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுவதும், தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனைகளைக் பின்பற்றுவதும் அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், நோயை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறினால் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் கண்பார்வை குறைபாடு போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடல் உழைப்பு மற்றும் புகையிலை பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு அபாயத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துக் கொள்ள முடியும் என்றார்.
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் 2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி, 20 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்ட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான இலங்கை மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமது வாழ்க்கை முறையை ஆரோக்கியமான முறையில் மாற்றியமைத்துக்கொண்டு, உரிய காலப்பகுதிகளில் முறையான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
































