Nov 18, 2026 - 10:58 AM

மட்டக்களப்பு, மாமாங்கம் உட்பட பல பகுதிகளில் மக்களை அச்சத்திற்குள்ளாக்கிவரும் குரங்கு ஒன்றை பிடிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சில தினங்களாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்குட்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்துள்ள தனியான குரங்கு ஒன்று ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை தாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தது.
இதன் காரணமாக மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த 8 இற்கும் மேற்பட்டவர்கள் குறித்த குரங்கினால் கடிக்குள்ளாக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று மாமாங்கம், அமிர்தகழி, பார்வீதி, சீலாமுனை ஆகிய பகுதிகளிலும் இந்த குரங்கு அட்டகாசம் செய்துவந்த நிலையில் குறித்த குரங்கினை பிடித்துச்செல்வதற்காக நேற்றும் இன்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துவந்தனர்.
கடந்த 16 ஆம் திகதி பார் வீதியில் குறித்த குரங்களை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்தபோதிலும் அதனை பிடிக்கமுடியாத நிலையில் அப்பகுதியில் குரங்கின் செயற்பாடுகள் காரணமாக விபத்து ஒன்றும் இடம்பெற்றதுடன் இருவர் குரங்கின் கடிக்கும் உள்ளாகியதை காணமுடிந்தது.
எனினும் அதனை பிடித்துச்செல்வதற்கு பல்வேறு பிரயத்தனங்களை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்தபோதிலும் அவர்களின் வாகனத்தில் ஏறிய பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரை ஏமாற்றி குறித்த குரங்கு தப்பிச்சென்றிருந்தது.
கடந்த 16 ஆம் திகதி குறித்த குரங்கினை பிடிப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்களும் முன்னெடுக்கப்பட்டபோதிலும் பிடிக்கமுடியாத நிலையிலும் இன்றைய தினமும் அதனை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதிலும் அவை கைகூடாத நிலையே இருந்தது.
இந்த நிலையில் மாமாங்கேஸ்வரர் ஆலய சூழலில் குறித்த குரங்கு தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுத்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

































