Nov 18, 2026 - 01:39 PM

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் (Global Entrepreneurship Week - GEW) இலங்கை 2026 நிகழ்வானது, நாட்டின் தொழில்முனைவோர் துறையை வலுப்படுத்தவும் வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும், ஆர்வமுள்ள தொழில்முனைவோர், தொடக்க வணிக முயற்சி நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கிறது.
உலகளாவிய தொழில்முனைவோர் வலையமைப்பால் (Global Entrepreneurship Network - GEN Global), விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள GEW Sri Lanka 2026 நிகழ்வு, அனைத்து 25 மாவட்டங்களிலும் உள்ள தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் இத்துறையின் பங்குதாரர்களை இணைக்கிறது. GEW Sri Lanka 2026 நிகழ்வின் தொடக்க விழா, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து, விஞ்ஞான வாரத்தின் இரண்டாம் நாளில் நடைபெற்றது. 2026 நவம்பர் 16 முதல் 22 வரை நடைபெறும் உலகளாவிய தொழில்முனைவோர் வாரத்தின் போது, இந்த தேசிய பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும். நாடு முழுவதும் தொழில்முனைவோர் முயற்சிகளை விரிவுபடுத்தவும், அவற்றின் அளவை அதிகரிக்கவும் ஆண்டு முழுவதும் செயல்பாடுகள் தொடரும். இந்தப் பிரச்சாரத்தில் குழுமட்ட கலந்துரையாடல்கள், பயிலரங்குகள், தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும் அமர்வுகள் மற்றும் வணிகக் கண்காட்சிகள் இடம்பெறும். இவை தொழில்முனைவோருக்கு அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், தங்கள் வணிகங்களைக் காட்சிப்படுத்தவும், தொழில் துறை சார்ந்தவர்களுடன் தொடர்புகொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும்.
இந்தத் தொடக்க விழாவில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன; கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க; விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி ரொஷானி திஸாநாயக்க; இலங்கைக்கான மாஸ்டர்கார்டு (Mastercard) உள்நாட்டு முகாமையாளர் மஹேஷா அமரசூரிய; இலங்கைக்கான GEN Global தேசிய தூதுவர் சுரேஷ் டி மெல்; NGage Strategic Alliance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷெரோன் ஜெயசுந்தர; Kapruka Holdings PLC நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் துலித் ஹேரத்; ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், eLearning.lk நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், MayaHive நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும், LMS, AI மற்றும் SaaS தொழில்நுட்ப ஆலோசகருமான சஞ்சய எல்விட்டில அவர்கள் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக அதனை வழிநடத்தினார்.
இந்த ஆண்டு முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியின் முக்கிய சிறப்பம்சமாக Entrepreneurship Marathon அமையவுள்ளது. இது அரச, தனியார் துறை, கல்வித்துறை, தொழில்முனைவோர் துறையை ஊக்குவிப்பவர்கள், மற்றும் இருதரப்பு மற்றும் பல்தேசிய நிறுவனங்களை ஒன்றிணைத்து, உள்ளூர் தொழில்முனைவோர்கள் தங்கள் வணிகங்களை மேம்படுத்தவும் வளர்த்துக்கொள்ளவும் உதவும்.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன அவர்கள் கூறியதாவது: “இலங்கையில் உலகளாவிய தொழில்முனைவோர் வாரம், கொழும்பில் உள்ள BMICH மண்டபத்தில் பிரதானமாக நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சியுடனும், அதனை 25 மாவட்டங்களிலும் உள்ள செயல்பாடுகளுடனும் தொடங்கியுள்ளது. உலகளாவிய தொழில்முனைவோர் வலையமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு, ஏறக்குறைய 200 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. இதில், இலங்கை தனது வெற்றிகரமான செயலாக்கத்திற்காக நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்முனைவு இன்றியமையாதது. மேலும், புதுமையான சிந்தனைகளை பொருட்கள் மற்றும் சேவைகளாக மாற்றி, உலகளாவிய சந்தைகளை அணுகி, அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய தொழில்முனைவோர் நமக்குத் தேவை. இந்த முன்னெடுப்பு, மாணவர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தொழில்முனைவோர் அறிவைப் பெறவும், வழிகாட்டுதலை அணுகவும், உள்ளூர் மற்றும் சர்வதேச வணிக வலையமைப்புகளுடன் இணையவும் ஒரு முக்கிய தளத்தை வழங்குகிறது. அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சிகள் மூலம், இலங்கையில் தொழில்முனைவோர் துறையை வலுப்படுத்துவதும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதும், வலுவான தொழில்முனைவோர் கலாச்சாரத்தை உருவாக்குவதும் எங்கள் நோக்கமாகும்.”
இந்த முன்னெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த GEW Sri Lanka 2026 நிகழ்வின் திட்ட பணிப்பாளர் சரித் கந்தமுல்ல, “கடந்த ஆண்டின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும், அவர்களுக்கு ஆதரவளிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். 2025ம் ஆண்டில், நாங்கள் நாடு தழுவிய அளவில் 1,864 நிகழ்வுகளை நடத்தினோம். மேலும், தொழில்முனைவில் இலங்கையின் தீவிர ஈடுபாட்டிற்காக, 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் GEN Global இலங்கைக்கு நான்காவது இடத்தை வழங்கியது. டிஜிட்டல் Nomad விசா தொடங்கப்படுவதற்கு வழிவகுத்த கொள்கை வட்டமேசை கலந்துரையாடல்களுக்கும் GEW ஆதரவளித்தது. அதே நேரத்தில், Startup Genome இலங்கையை உலகின் அதிவேகமாக வளரும் தொடக்க வணிகமுயற்சித் துறையாக தரவரிசைப்படுத்தியது. இந்த ஆண்டு, 2,500 நிகழ்வுகளை நடத்தி, 100,000 பங்கேற்பாளர்களை ஈடுபடுத்தி, 5,000 தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்தச் சாதனைகளை மேலும் வளர்க்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். Entrepreneurship Marathon மற்றும் இத்துறை முழுவதும் உள்ள ஒத்துழைப்பின் மூலம், உள்ளூர் தொழில்முனைவோர் செழிக்கத் தேவையான தொடர்புகளையும் ஆதரவையும் பெற உதவ விரும்புகிறோம்,” என்றார்.
இந்த முயற்சிகளின் மூலம், தொழில்முனைவோர்கள் வாய்ப்புகளைப் பெறவும், அறிமுகங்களை உருவாக்கவும், தங்கள் வணிகங்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய, ஒன்றோடொன்று இணைந்த மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவதை GEW Sri Lanka 2026 நிகழ்வு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

































