Nov 18, 2026 - 01:42 PM

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் லிமிடெட் (SLIC General) மற்றும் வியட்நாமின் PVI இன்சூரன்ஸ் கோப்பரேஷன் நிறுவனம் ஆகியன இணைந்து, ‘2026 General Insurance Pinnacle Award – GIPA’ விருது விழாவை வெகு விமரிசையாக நடத்தி, பொதுக் காப்புறுதி விற்பனைத் துறையில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய இரு நிறுவனங்களையும் சேர்ந்த சிறந்தவர்களைக் கௌரவித்தன.
மூன்றாவது GIPA விருது வழங்கும் விழா, 2026 ஒக்டோபர் 09ஆம் திகதி வியட்நாமின் ஹனோய் நகரில் அமைந்துள்ள PVI இன்சூரன்ஸ் கோப்பரேஷனின் தலைமையகமான PVI Tower கட்டடத்தின் 20ஆவது மாடியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. SLIC General நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையைச் சேர்ந்த 40 GIPA விருது வெற்றியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அத்துடன், PVI இன்சூரன்ஸ் கோப்பரேஷனின் விருது வெற்றியாளர்கள், அவர்களது மேற்பார்வையாளர்கள் மற்றும் PVI இன்சூரன்ஸ் கோர்ப்பரேஷன் மற்றும் Hanoi-Re நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமைத்துவக் குழுக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 100க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட 2026 GIPA விருது விழா, சிறப்பு, பரஸ்பர நட்புறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கொண்டாடிய மறக்க முடியாததொரு நிகழ்வாக அமைந்தது.
வியட்நாமின் பொதுக் காப்புறுதித் (ஆயுள் அல்லாத காப்புறுதி) துறையில் சந்தையின் முன்னணி நிறுவனமாக விளங்கும் PVI இன்சூரன்ஸ் கோப்பரேஷன், இந்த விருது வழங்கும் விழாவின் மூலோபாய விருந்தோம்பல் பங்காளராகத் தனது பங்களிப்பை வழங்கியது. PVI இன்சூரன்ஸ் கோப்பரேஷனின் தலைவரும் PVI Holdings நிறுவனத்தின் உப தலைவருமான Dương Thanh Danh அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ், அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி Phạm Anh Đức மற்றும் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரி Le Hong Linh ஆகியோரின் தலைமையிலான PVI சிரேஷ்ட முகாமைத்துவக் குழு, GIPA எண்ணக்கருவை மேலும் ஊக்குவித்து முன்னெடுத்துச் செல்வதற்காக SLIC General நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டது. அத்துடன், PVI குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான Hanoi Re நிறுவனத்தின் முகாமைத்துவக் குழுவினரும் இவ்விருது விழாவில் கலந்துகொண்டதுடன், அந்நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விருதுகளை வென்றவர்களும் இதில் பங்கேற்றனர்.
SLIC General மற்றும் PVI இன்சூரன்ஸ் கோப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் சிறந்த திறமையாளர்களைக் கௌரவிப்பதுடன், பொதுக் காப்புறுதித் துறையில் தொழில்சார் அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும், கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்நிகழ்வு சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்தது.
துறையில் முன்னணியில் திகழும் இந்த இரு நிறுவனங்களும் தமது ஒத்துழைப்பின் ஊடாக விற்பனைத் துறையில் சிறப்புக்கான புதியதொரு யுகத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், விற்பனைச் செயலாற்றுகையில் சிறந்து விளங்கியவர்களைக் கௌரவித்தன. வணிகமொன்றின் வெற்றியை அளவிடுவதற்கான ஒரேயொரு அளவுகோலாக மொத்த விற்பனை அளவு மாத்திரம் இனிமேலும் இருக்க முடியாது என்பதை இந்த ஒத்துழைப்பு வலியுறுத்தியது. வெறுமனே விற்பனை அளவைக் கருத்திற்கொள்வதற்கு அப்பால், நீண்டகால நிலைத்தன்மை, சீரான செயற்பாட்டுத் திறன் மற்றும் வலுவான நிறுவன இலாபத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மூலோபாய வணிக மதிப்பீட்டு முறையாக GIPA விருது இங்கு தனித்துவம் பெறுகின்றது.
வணிக வளர்ச்சி, வாடிக்கையாளர்களைத் தக்கவைத்தல் மற்றும் நிதி வலிமை ஆகிய மூன்று துறைகளிலும் சமமான கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் GIPA விருது விழா, பாரம்பரிய விற்பனை இலக்குகளை அடைவதை மாத்திரம் நோக்கமாகக் கொண்ட அணுகுமுறைக்குப் பதிலாக, நிலைபேறான வளர்ச்சி மற்றும் நீண்டகால வணிக வெற்றியை இலக்காகக் கொண்ட மூலோபாய அணுகுமுறையை நோக்கி நகர்வதற்கான முன்னணி ஊக்குவிப்பு மேடையாகச் செயற்படுகின்றது. இறுதியாக, தனிநபர் சாதனைகளைக் கௌரவிப்பதற்கு அப்பால் சென்று, பிராந்தியக் காப்புறுதித் துறையின் சிறப்புத் தரங்களை உயர்த்துவதற்கும் இவ்விருது விழா பங்களிக்கின்றது. தொழில்சார் விற்பனைச் சிறப்பானது, வணிகத்திற்குப் உண்மையில் சேர்க்கப்படும் பெறுமதி மற்றும் உருவாக்கப்படும் இலாபத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அளவிடப்பட வேண்டும் என்பதையும் இவ்விருது விழா உறுதிப்படுத்தியது.
ஹனோய் நகரில் நடைபெற்ற GIPA மாநாட்டின் மூன்றாவது கட்டம், J B Boda & Reinsurance Brokers Lanka மற்றும் சிங்கப்பூரின் JB Boda & Co ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சம்பா மெல்லவ அவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது. அத்துடன், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் காப்புறுதித் துறைகளின் முன்னணிப் பிரமுகர்களின் முழுமையான ஆதரவும் அங்கீகாரமும் இந்நிகழ்வுக்குக் கிடைத்தன. பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இலங்கை காப்புறுதிக் கட்டுப்பாட்டு ஆணைக்குழு (Insurance Regulatory Commission of Sri Lanka – IRCSL) தலையிட்டு, இம்மாநாட்டில் கலந்துகொண்ட வியட்நாம் காப்புறுதிக் கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு GIPA எண்ணக்கருவை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட GIPA நிகழ்ச்சித்திட்டமானது, காப்புறுதித் துறையில் நிலைபேறான சிறப்பு மற்றும் வணிகத் தரத்தை அங்கீகரிக்கும் நோக்கில், பொதுக் காப்புறுதித் துறையில் சிறந்த விற்பனைச் செயலாற்றுகையை வெளிப்படுத்தும் தொழில்சார் நிபுணர்களுக்கு வழங்கப்படும் சர்வதேச அங்கீகார நிகழ்ச்சித்திட்டமாகும். இதன் முதலாவது விருது விழா, J B Boda Sri Lanka நிறுவனத்தின் அனுசரணையுடன் SLIC General நிறுவனத்தின் வெற்றியாளர்களுக்காக 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சித்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் J B Boda Indonesia நிறுவனத்துடனான ஒத்துழைப்புடன் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இரண்டாவது கட்ட விருது விழா நடைபெற்றது. இதன்போது இலங்கை மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
வெளிநாட்டு வெற்றியாளர்களுக்கு விருந்தோம்பல் வழங்குவதன் மூலம், உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் காப்புறுதித் துறையின் சிறப்புக்காகத் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை SLIC General நிறுவனம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், விற்பனைத் துறையில் தனித்துவமான சாதனைகளை அங்கீகரிப்பதற்கான முன்னணி சர்வதேச மேடையாக GIPA விருது விழாவை நிலைநிறுத்துவதற்கும் இந்நிறுவனம் பங்களிப்பு வழங்குகின்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், SLIC General நிறுவனத்தின் வருடாந்த விருது விழாவிலும், விசேட ‘GIPA Day’ நிகழ்ச்சித்திட்டத்திலும் GIPA விருது வெற்றியாளர்களைக் கௌரவித்து விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத் தொழில்சார் நிபுணர்களிடையே நிலைபேறான சிறப்பை அடைவதை நனவாக்கும் நோக்கில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இவ்விருது விழாவில், வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க GIPA வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்படுகின்றன.

































