Nov 18, 2026 - 04:17 PM

முடிவடைந்த முதல் ஒன்பது மாதங்களில் குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 59.4% இனால் உயர்ந்து ரூ 10.3 பில்லியனாக பதிவு, வருமான வளர்ச்சி 11.1% ஆகும்.
SLT PLC இன் ஒன்பது மாத வரிக்கு பிந்திய இலாபம் 58.0% ஆக உயர்வு, Mobitel இன் வரிக்கு பிந்திய இலாபம் இரண்டு மடங்கிற்கு மேலாக 110.8% ஆக உயர்வு.
2026 இன் மூன்றாம் காலாண்டில் குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 69.3% இனால் உயர்ந்து ரூ 3.7 பில்லியனாக பதிவு, தொழிற்படு இலாபம் 25.8% இனால் உயர்வு.
மூன்றாம் காலாண்டு குழும வருமானம் 10.9% இனால் உயர்வு, நேரடி செலவுகள் 8.8% அதிகரிப்பைப் பதிவு
SLT குழுமம், 2026 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் ரூ. 10.3 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 6.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 59.4% அதிகரிப்பாகும். இரட்டை இலக்க வருமான வளர்ச்சி, உறுதியான புரோட்பான்ட் கேள்வி மற்றும் அதிகரித்திருந்த வாடிக்கையாளர்கள், செலவுக் கட்டுப்பாடுகள், அதிகரித்த வட்டி வருமானம் மற்றும் அந்நியச் செலாவணி வருமதிகள் போன்றன SLT PLC மற்றும் மொபிடெலின் நிதிப் பெறுபேறுகளை உயர்த்தியிருந்தன. மூன்றாம் காலாண்டு உறுதியானதாக அமைந்திருந்ததுடன், குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 69.3% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது.
குழுமத்தின் இலாபகரத்தன்மையில் இரட்டை இலக்க வருமான வளர்ச்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செலவுகள் போன்றன பங்களிப்பு
2026 இன் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கான குழுமத்தின் வருமானம் 94,003 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 84,646 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 11.1% அதிகரிப்பைக் காட்டுவதுடன், மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. புரோட்பான்ட் சேவைகள் குழுமத்தின் பிரதான வளர்ச்சி உந்துசக்தியாக தொடர்ந்து விளங்குகின்றன. 4G மற்றும் 5G வலையமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் குழுமத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட நிலையான அதிகரிப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளன.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகரித்த மின்சாரக் கட்டணங்கள், எரிபொருள் விலைகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உபகரணங்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் நேரடிச் செலவுகள் 8.2% ஆக மட்டும் அதிகரித்து, ஒப்பீட்டளவில் இது வருமான வளர்ச்சியை விடவும் மிகக் குறைந்த மட்டத்திலேயே பேணப்பட்டுள்ளது. மொத்த இலாபம் 14.2% ஆல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, செயற்பாட்டு இலாபம் 11,792 மில்லியன் ரூபாயிலிருந்து 15,499 மில்லியன் ரூபாயாக உயர்ந்து, 31.4% அதிகரிப்பினைப் பதிவுசெய்துள்ளது.
வட்டிச் செலவினங்கள் 2.2% ஆல் குறைந்துள்ளன. குழுமத்திடம் காணப்படும் கணிசமான அமெரிக்க டொலர் கையிருப்பின் காரணமாக, அந்நியச் செலாவணி இலாபம் 289% ஆல் அதிகரித்து 755 மில்லியன் ரூபாயாகவும், வட்டி வருமானம் 65.1% உயர்வுடன் 1,113 மில்லியன் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. வரிக்கு முந்திய இலாபம் 37.6% ஆக வளர்ச்சியடைந்து 13,026 மில்லியன் ரூபாயை எட்டியதுடன், வினைத்திறனான வரித் திட்டமிடலினூடாக வரிக்குப் பிந்திய இலாபம் 59.4% அதிகரிப்பினைப் பதிவுசெய்து 10,306 மில்லியன் ரூபாயை அடைந்துள்ளது. பொருளாதாரத் தாக்கத்திற்கும் மேலாக, அரசாங்கத்திற்கு SLT-MOBITEL நிறுவனம் வழங்கும் நேரடிப் பங்களிப்பு மிக குறிப்பிடத்தக்கதாகும். 2026 செப்டெம்பர் 30 உடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில், குழும மட்டத்தில் அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் வரி விதிப்புகள் 30 பில்லியன் ரூபாயாகும்.
இந்தப் பெறுபேறுகள் தொடர்பில் SLT குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய தளம்பல் நிலைமைகளுக்கு மத்தியிலும், SLT-MOBITEL நிறுவனம் தனது வருமான வளர்ச்சியை வலுவான வருவாய் ஈட்டலாக மாற்றியுள்ளதை 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான நிதிப் பெறுபேறுகள் காண்பிக்கின்றன. தொழிற்பாட்டுத் திறன், விவேகமான மூலதன முகாமைத்துவம் மற்றும் செலவுச் சிக்கன நடவடிக்கை ஆகியவற்றில் மேற்கொண்ட அர்ப்பணிப்பான பணிகளினால் இப்பெறுபேறுகளைச் சாத்தியமாக்கிய எமது குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”
“நாம் எமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் நாம் சேவையாற்றும் சமூகங்கள் ஆகிய அனைவரிடமும் சம அளவிலான அர்ப்பணிப்பை SLT-MOBITEL ஐச் சேர்ந்த நாம் கொண்டுள்ளோம். இவ்வாண்டில் நாம் வாடிக்கையாளர் அனுபவம், எமது பணியாளர்கள் மற்றும் 5G, 4G மற்றும் வீடுகளுக்கான ஃபைபர் இணைப்பு (Fibre-to-the-home) உள்ளிட்ட எதிர்கால வலையமைப்பு ஆகியவற்றில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளதுடன், நாட்டிலுள்ள ஒவ்வொரு இரண்டாம் நிலைப் பாடசாலையையும் ஃபைபர் வலையமைப்பின் ஊடாக இணைத்துள்ளோம். இந்தச் சமநிலையான, பல்தரப்புப் பங்குதாரர்களை உள்ளடக்கிய அணுகுமுறை எமது வளர்ச்சியை நிலைபேறானதாக மாற்றுவதுடன், எமது நிறுவனத்தை உண்மையானதொரு தேசிய முன்னோடியாக நிலைநிறுத்துகின்றது என நாம் உறுதியாக நம்புகின்றோம்.” என்றார்.
SLT PLC மற்றும் Mobitel உறுதியான இலாப வளர்ச்சியைப் பதிவு
முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில், SLT PLC இன் வருமானம் 11.0% அதிகரிப்பினைப் பதிவுசெய்து 59,860 மில்லியன் ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளது. செலவுக் கட்டுப்பாடு மற்றும் வினைத்திறனான வரித் திட்டமிடல் ஆகியவற்றின் காரணமாக, தொழிற்பாட்டு இலாபம் 36.1% அதிகரிப்புடன் 9,864 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதுடன், வரிக்கு முந்திய இலாபம் 35.5% ஆக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) 4,069 மில்லியன் ரூபாயிலிருந்து 58.0% ஆக அதிகரித்து 6,429 மில்லியன் ரூபாயை எட்டியுள்ளது.
மொபிடெல் நிறுவனத்தின் வருமானம் 15.5% வளர்ச்சியடைந்து 40,743 மில்லியன் ரூபாயை எட்டியுள்ளதுடன், இது குழுமத்தின் மற்றும் SLT PLC இன் வளர்ச்சியை விடவும் அதிகமாகும். தொழிற்பாட்டு இலாபம் 47.2% அதிகரித்து 4,969 மில்லியன் ரூபாயாகவும், வரிக்கு முந்திய இலாபம் 76.0% ஆக அதிகரித்து 4,040 மில்லியன் ரூபாயாகவும் உயர்ந்துள்ளன. மொபிடெல் நிறுவனத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) இரண்டு மடங்குகளுக்கும் மேலாக அதிகரித்து, 110.8% உயர்வுடன் 3,528 மில்லியன் ரூபாயை எட்டியுள்ளது.
மூன்றாம் காலாண்டு (Q3 2026) வருமான வளர்ச்சி மற்றும் செலவு கட்டுப்பாட்டினூடாக குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 69.3% இனால் உயர்வு
முடிவடைந்த மூன்றாம் காலாண்டுக்கான குழுமத்தின் வருமானம் 10.9% அதிகரித்து 32,689 மில்லியன் ரூபாயை எட்டியுள்ளதுடன், இது 3,210 மில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும்; அதேவேளை, நேரடிச் செலவுகள் 8.8% ஆக உயர்ந்துள்ளன. தொழிற்பாட்டு இலாபம் 25.8% ஆக வளர்ச்சியடைந்து 5,334 மில்லியன் ரூபாயை எட்டியுள்ளதுடன், EBITDA 9.3% ஆக வளர்ச்சியடைந்துள்ளது. உபரிப் பண இருப்புகள் மீதான முதலீடுகளிலிருந்து கிடைத்த வட்டி வருமானம் 458 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதுடன், வரிக்கு முந்திய இலாபம் 17.1% அதிகரித்து 4,471 மில்லியன் ரூபாயாகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 69.3% அதிகரிப்பைப் பதிவுசெய்து குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) 3,705 மில்லியன் ரூபாயாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
SLT PLC இல், மூன்றாம் காலாண்டு வருமானம் 11.7% ஆக வளர்ச்சியடைந்து 20,551 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதுடன், தொழிற்பாட்டு இலாபம் 29.0% வளர்ச்சியுடன் 3,201 மில்லியன் ரூபாயாகவும், வரிக்குப் பிந்திய இலாபம் 26.5% வளர்ச்சியுடன் 1,799 மில்லியன் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மொபிடெல் நிறுவனத்தின் வருமானம் 20.6% ஆக உயர்ந்து 14,542 மில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. மேலும், அதன் EBITDA 31% ஆல் அதிகரித்து 5,517 மில்லியன் ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளதோடு, தொழிற்பாட்டு இலாபம் சுமார் இரண்டு மடங்காகி 92.8% உயர்வுடன் 2,375 மில்லியன் ரூபாயாகவும், வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) 195.5% அதிகரித்து 1,845 மில்லியன் ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
எதிர்கால செயற்பாடுகள்
பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு Fibre இணைப்பினை வழங்கும் தேசிய முயற்சியான School Fiberization Project திட்டத்தில் SLT PLC தொடர்ந்தும் தனது கவனத்தைச் செலுத்தி வருகின்றது. அத்துடன், இவ்வருடத்திற்காகத் திட்டமிடப்பட்ட 5G வலையமைப்பு விரிவாக்கத்தின் பெரும்பகுதியை மொபிடெல் நிறுவனம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், தனது 5G வலையமைப்பை மேலும் விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அத்துடன், குழுமம் தனது செலவுக் கட்டுப்பாடு முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
உட்கட்டமைப்பு வசதிகளுக்கு மேலதிகமாக, அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கும் SLT-MOBITEL நிறுவனம் தீவிர பங்களிப்பை வழங்கி வருகின்றது. தேசிய மட்டத்திலான பிரதான நிகழ்வான தேசிய AI கண்காட்சி (National AI Expo) உட்பட பல்வேறு 5G மற்றும் AI ஆகியவற்றின் தேசிய மட்டத்திலான தொழில்நுட்ப விளக்க நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், நாடளாவிய ரீதியிலுள்ள வர்த்தக நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆழமான தொழில்நுட்ப அனுபவங்களை SLT-MOBITEL குழுமம் வழங்கி வருகின்றது.
SLT-MOBITEL பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத் கருத்துத் தெரிவிக்கையில், “2026 ஆம் ஆண்டின் முடிவடைந்த முதல் ஒன்பது மாதங்களில் பதிவான நிதி வளர்ச்சி வேகமானது, புரோட்பான்ட் மற்றும் நிறுவனங்களுக்கான சேவைகளுக்கான தொடர்ச்சியான கேள்வியினாலும், வருமானம் மற்றும் சந்தாதாரர் சந்தைப் பங்கில் மொபிடெல் அடைந்த துரித வளர்ச்சியினாலும் அடையப்பட்டுள்ளது. செயற்பாட்டு வினைத்திறனில் தொடர்ந்தும் கவனம் செலுத்துவதுடன், எமது 5G வலையமைப்பு விரிவாக்கம், வீடுகளுக்கான FTTH (Fiber To The Home) விரிவாக்கங்களையும் நாம் தொடர்ந்தும் விஸ்தரித்து வருகிறோம். தனது நிதி நிலையை வலுப்படுத்துவதில் குழுமம் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனம், 2026 நவம்பர் 4 ஆம் திகதி Fitch Ratings நிறுவனத்தினால் தேசிய நீண்ட கால கடன் தர மதிப்பீடு ‘AA+(lka)’ என்ற தேசிய நீண்டகாலக் கடன் தரமதிப்பீட்டிற்குத் தரமுயர்த்தப்பட்டதன் மூலம் பிரதிபலிக்கின்றது. மேலும், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் இலக்குகளுடன் இணைந்து செயற்படும் நாம், வாடிக்கையாளர்களும் வர்த்தக நிறுவனங்களும் வளர்ச்சியடைவதற்குத் தேவையான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறோம்.” என்றார்.

































