Oct 16, 2025 - 10:41 AM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
மட்டக்களப்பு, புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக அச்சுறுத்தி 70 ஆயிரம் ரூபா கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (15) உத்தரவிட்டார்.
இது பற்றி தெரியவருவதாவது,
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் கையடக்க தொலைபேசி வட்சப் செயலிக்கு புகைப்படம் ஒன்றை சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (14) அனுப்பி, உனது முகநூல் பக்கத்தை ஹேக் செய்து அதில் உள்ள வீடியோக்களை புகைப்படங்களை தரவு இறக்கம் செய்துள்ளதாகவும், 70 ஆயிரம் ரூபா பணம் தருமாறு கப்பம் கோரியதுடன் பணம் தர மறுத்தால் அந்த வீடியோக்களை புகைப்படங்களை முகநூல் ஒன்றில் தரவேற்றம் செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த நபர் பணம் தருவதாகவும் தற்போது கையில் பணம் இல்லை சீலாமுனையில் உள்ள வங்கியிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரத்தில் எடுத்து தருவதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கப்பம் கோரியவர் தான் ஒரு இளைஞன் ஒருவரை அனுப்புவதாகவும் அவரிடம் ஒன்றும் பேசக்கூடாது பணத்தை வழங்கி வைக்குமாறு தெரிவித்த நிலையில் குறித்த வங்கியிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரத்துக்கு சென்று காத்திருந்தபோது கப்பம் கோரியவர் அனுப்பப்பட்ட இளைஞனை அடையாளம் கண்டு கொண்டார்.
இதை அடுத்து அந்த இளைஞரிடம் நீ இன்னாரது சகோதரன் தானே என வினாவி உறுதிபடுத்திக் கொண்டு அவரிடம் பணம் ஏ.ரி.எம். இயந்திரத்தில் இருந்து எடுக்க முடியவில்லை நாளைக்கு எடுத்து தருவதாக தெரிவித்து அந்த இளைஞனை அங்கிருந்து அனுப்பிவிட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மட்டு. தலைமையக பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 24 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்ததுடன் ஒருவர் தலைமறைவாகியுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

































