Mar 26, 2026 - 02:59 PM -
0
வேகமாக மாறிவரும் சமூக மற்றும் பொருளாதார துறையில் தனது அளவுகோல் மற்றும் பொருத்தப்பாட்டை நிரூபித்து, நாட்டின் மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதும், கட்டமைக்கப்பட்ட தன்னார்வ இயக்கங்களில் ஒன்றாக தனது நிலையை லயன்ஸ் கிளப் இன்டர்நெஷனல் – ஸ்ரீலங்கா (Lions Clubs International – Sri Lanka), வலுப்படுத்தி வருகிறது.
லயன்ஸ் கிளப் இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை கிளையான ‘லயன்ஸ் இன்டர்நெஷனல் மல்டிபிள் டிஸ்ட்ரிக்ட் 306’ (Lions International Multiple District 306), உள்நாட்டு செயற்பாடுகளையும் உலகளாவிய வலிமையையும் ஒன்றிணைத்து, தொழில்முனைவு, சமூக மேம்பாடு, சுகாதாரம் மற்றும் அனர்த்த நிவாரணம் ஆகியவற்றில் அளவிடக்கூடிய பெறுபேறுகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.
நாட்டின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்யும் பல்வேறு முயற்சிகளின் ஊடாக, இலங்கையின் லயன்ஸ் கழகமானது தற்போதைய நிதியாண்டில் மட்டும் சுமார் ஆறு மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 700 இற்கும் மேற்பட்ட கழகங்களில் பரவியுள்ள 18,000 இற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த அமைப்பானது, நாடு முழுவதும் ஒரு வலுவான பிரசன்னத்தை கொண்டுள்ளது. அண்மையில் உருவாக்கப்பட்ட 12 மாவட்டங்களைக் கொண்ட புதிய கட்டமைப்பு, தெரிவு செய்யப்பட்ட மாவட்ட ஆளுநர்களின் (District Governor) தலைமையில் இயங்குகின்றது. இது அமைப்பின் அணுகலையும், நிர்வாகம் மற்றும் செயற்பாட்டுத் திறனையும் மேம்படுத்தியுள்ளது. இந்த மாற்றமானது தலைமைத்துவம் மற்றும் சேவையில் ஒரு முன்னோக்கு சிந்தனையைப் பிரதிபலிப்பதுடன், லயன்ஸ் கழகம் மென்மேலும் சுறுசுறுப்பாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தனது செல்வாக்கை விரிவுபடுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
இலங்கையில் லயன்ஸ் கழகத்தின் பலம் என்பது தனது நோக்கத்தை விரிவான அளவில் முன்னெடுக்கும் திறனில் தங்கியுள்ளது என Multiple Council தலைவி லயன் ஷயானா ஜயலத் குறிப்பிட்டார். அத்துடன், ஒரு வருடத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது, நீண்டகால மற்றும் அளவிடக்கூடிய மாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் வலிமையையும் அதன் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பையும் காட்டுவதாக அவர் வலியுறுத்தினார். இன்றைய லயன்ஸ் கழகம் என்பது சேவையைப் போலவே மனித பிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தை பற்றியது என்றும், குறிப்பாக தொழில் வல்லுநர்கள், பெண்கள் மற்றும் இளம் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் வளர்ச்சியடையும் அதே வேளையில், சமூகத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த அமைப்புடன் இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் லயன்ஸ் அமைப்பிற்கு லயன்ஸ் கிளப் இன்டர்நெஷனல் அறக்கட்டளை (LCIF) கணிசமான உலகளாவிய ஆதரவை வழங்கி வருகிறது. இது பல வருடங்களாக இலங்கையில் லயன்ஸ் சேவை நடவடிக்கைகளுக்காக 17 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மானியங்களை வழங்கியுள்ளது. குருதி சுத்திகரிப்பு டயலிசிஸ் நிலையங்கள், கண் மருத்துவமனைகள், வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் தற்போது சுமார் 5,000 பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு தினமும் ஒரு வேளை உணவு வழங்கும் “Protect Child Nutrition” (சிறுவர் போஷாக்கை பாதுகாப்போம்) போன்ற தேசிய போசாக்குத் திட்டங்கள் உள்ளிட்ட பாரிய அளவிலான திட்டங்கள் இந்த நிதியின் மூலம் சாத்தியமாகியுள்ளன. அத்துடன், நெருக்கடி காலங்களில் லயன்ஸ் கழகம் விரைவாகவும் திறமையாகவும் பதிலளிக்க முடியும் என்பதை இவை நிரூபித்துள்ளது. அண்மையில் ‘டிட்வா’ (Ditwah) அனர்த்த நிவாரண திட்டத்தின் மூலம், LCIF இன் கணிசமான மானியத் தொகை உட்பட சுமார் 500,000 அமெரிக்க டொலர் நிதியைத் திரட்டியமை, நாட்டின் மீட்சி மற்றும் மறுவாழ்வு திட்டங்களில், இந்த அமைப்பின் முக்கிய பங்கை எடுத்துக் காட்டுகிறது.
லயன்ஸ் கழகமானது அதன் நேரடி பங்களிப்புகளுக்கு மேலதிகமாக, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான ஒரு வலுவான தளத்தையும் வழங்குகிறது. இது தனிநபர்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை மாத்திரம் வழங்காமல், அர்த்தமுள்ள தொடர்புகள், தலைமைத்துவ மேம்பாடு மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றிற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட சூழலை வழங்கி வருகிறது. அதிகரித்து வரும் தொடர்பற்ற மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட உலகில், குறிப்பாக தொழில் முன்னேற்றம் மற்றும் ஒரு நோக்கத்தை அடைய நினைக்கும் பெருநிறுவன வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் வளர்ந்து வரும் தலைவர்களுக்கு இந்த மனித நேய அம்சம் மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அது மாத்திரமன்றி, இந்த அமைப்பானது எதிர்கால தலைமைத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பெண் தலைமைத்துவத்தில் காட்டி வரும் அதிக அக்கறை காரணமாக அமைப்பின் நற்பெயர் மாறி வருகின்றது. கழக மட்டம் முதல் தேசிய மட்டம் வரை முக்கிய தலைமைத்துவப் பொறுப்புகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.
தொழில்முனைவோருக்கான ஆதரவு, இலங்கையின் லயன்ஸ் கழகத்தின் அதிகம் அறியப்படாத ஒரு சேவை நடவடிக்கையாகும். உறுப்பினர்களின் அதிகரித்து வரும் புள்ளிவிபரங்கள் காரணமாக நாடு முழுவதும் இத்தகைய திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக, “லங்கா லயன்ஸ் அறக்கட்டளை” (Lanka Lions Foundation) ஊடாக குறிப்பாக வீட்டில் பெண்களால் நடத்தப்படும் வணிகங்களை ஊக்குவித்தல் மற்றும் ஆதரிக்கின்ற முயற்சிகள் அமைகின்றன.
லயன்ஸ் கழகத்தின் இளைஞர் பிரிவான லியோ கிளப் (Leo Clubs) ஆனது, இலங்கையின் இளைஞர்களுக்காக கட்டமைக்கப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்துதல் மற்றும் மதிப்புமிக்க தலைமைத்துவ வாய்ப்புகளை வழங்குகிறது. தொடர்ச்சியான செயற்பாடு, புத்தாக்கம், நீண்டகால சாதகமான தாக்கத்தை உறுதி செய்வதற்காக, லியோ கழகம் தொடர்ச்சியாக இளம் தலைவர்களை உருவாக்கி வருகின்றது.
தன்னார்வத் தொண்டு குறித்த பார்வைகள் தொடர்ச்சியாக மாறிவரும் நிலையில், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சேவை அமைப்பானது எதனைச் சாதிக்க முடியும் என்பதை லயன்ஸ் இன்டர்நேஷனல் ஆனது மீள்வரையறை செய்கிறது. இது அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தர்மங்களுக்கு அப்பாற்பட்ட, கட்டமைக்கப்பட்ட மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாதிரியை எடுத்துக் காட்டுகிறது. வெறுமனே சமூகத்திற்கு பிரதியுபகாரம் செய்யும் ஒரு வழியாக மட்டுமல்லாமல், சாதகமான தாக்கம், தலைமைத்துவம் மற்றும் பிணைப்பு ஆகியன ஒன்றிணைகின்ற, ஒரு மாறுபட்ட வலையமைப்பாக பலர் மத்தியில் இது தற்போது திகழ்ந்து வருகிறது.
