Apr 6, 2026 - 01:53 PM -
0
Air Sports International (Pvt) Ltd தனது புதிய Air Sports Club ஐ 2026 ஏப்ரல் 8ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் ஆரோக்கியம், நல்வாழ்வு, உடற்தகுதி, போட்டித்திறன் மற்றும் சமூகம் சார்ந்த அணுகுமுறைகளில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாக்குறுதியுடன் இந்த வசதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இசுரு ஹேவாபராக்ரம, புர்ஹானுதீன் தசீம் மற்றும் கணாதரன் ஜெயகுமார் ஆகியோரின் தூரநோக்குச் சிந்தனையில் உருவான Air Sports Club, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் புதிய மாற்றங்களையும் தனித்துவத்தையும் எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுக்கு ஒரு பொருத்தமான தருணத்தில் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக செலவில் சர்வதேச தரத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வசதி, முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ளதுடன், போட்டிகள் மற்றும் நிகழ்வுகளை சர்வதேச ரீதியில் நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு ஏதுவான நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது. இங்கு நவீன ரக Pickleball மற்றும் Badminton திடல்கள், மேசைப்பந்து, அங்கத்தவர் ஓய்வறை மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற வசதிகள் காணப்படுகின்றன. அத்துடன் யோகா, நடனம், Zumba, Pilates போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கான பல்நோக்கு ஸ்டுடியோவும் இங்கு அமைந்துள்ளது. மேலும், Cold Plunges, IV Drips மற்றும் Therapeutic recovery உள்ளிட்ட விசேட உடல்நல மீட்பு மற்றும் செயல்திறன் பகுதிகளையும் இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் Pickleball விளையாட்டு இன்னும் ஒரு புதிய அறிமுகமாகவே காணப்பட்ட போதிலும், இது உலக அளவில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் விளையாட்டுகளில் ஒன்றாகும். குறிப்பாக அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இவ்விளையாட்டு மிகத் தீவிரமாக பிரபல்யமடைந்து வருகின்றது. ஏனைய விளையாட்டுக்களுடன் ஒப்பிடுகையில், மிகக் குறுகிய காலத்தில் சமூகங்களிடையே இவ்விளையாட்டு பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வாறானதொரு உலகளாவிய எழுச்சியில் இலங்கையையும் இணைத்துக் கொள்வதற்கு இந்த முயற்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
Air Sports International (Pvt) Ltd இன் பணிப்பாளர் இசுரு ஹேவாபராக்ரம கருத்துத் தெரிவிக்கையில், “Pickleball என்பது வெறும் விளையாட்டு மாத்திரமல்ல, அது மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தி என்ற ஆழமான நம்பிக்கையிலிருந்தே Air Sports Club உருவானது. வெறும் விளையாட்டுத் திடல்களை உருவாக்குவது மாத்திரமல்ல எமது நோக்கம். மாறாக, மக்கள் ஒன்றுகூடி, ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடி, ஒரு சமூகமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவதே எமது இலக்காகும். 2024 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது முதல், ஒவ்வொரு விடயத்திலும் நாம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். ஆற்றல், நல்வாழ்வு மற்றும் மனிதர்களுக்கிடையிலான பிணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழலை நாம் உருவாக்கியுள்ளோம். இங்கு நீங்கள் விளையாடவும், உடல் நலனை மேம்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தவும் முடியும். மக்கள் இந்த விளையாட்டிற்காக இங்கு வந்து, இறுதியில் இங்கிருக்கும் உறவுகளுக்காகவே இங்கேயே தங்கிவிடும் ஒரு சூழலை உருவாக்குவதே எமது நோக்கம்,” என்றார்.
Air Sports International (Pvt) Ltd. இன் பணிப்பாளர் புர்ஹானுதீன் தசீம் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த புதிய பகுதி, சாதனையாளர்கள் மற்றும் வெற்றியாட்களுக்கான ஒரு களமாக விளங்குவதுடன், அனைத்து மட்டங்களிலுமான வீரர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றிணைந்து விளையாடக்கூடிய ஒரு மையமாகவும் திகழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் உயர்தரமான சூழலை உருவாக்குவதிலேயே நாம் எமது கவனத்தைச் செலுத்தியுள்ளோம். இது போட்டித்தன்மை வாய்ந்த விளையாட்டுக்களுக்கும், அன்றாட ஈடுபாடுகளுக்கும் ஒரு சிறந்த அடித்தளமாக அமையும்.” என்றார்.
விளையாட்டு மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு நுழைவாயிலாக இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பல்நோக்கு ஸ்டுடியோவில் யோகா, Zumba, Stretching, Pilates போன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், Ice baths வசதியுடனான உடல்நல மீட்பு மையம் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியனவும் இங்கு காணப்படுகின்றன. ஒவ்வொரு பயிற்சி அமர்வுக்குப் பின்னரும் அங்கத்தவர்கள் ஓய்வெடுக்கவும், ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடி புத்துணர்ச்சி பெறவும் இவை சிறந்த இடமாக அமையும். Air Sports Club அதிகாலை 6:00 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருப்பதுடன், பரந்தளவிலான சமூகத்தினருக்கு நெகிழ்வுத்தன்மை கொண்ட மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்கும்.
Air Sports International (Pvt) Ltd. பணிப்பாளர் கணாதரன் ஜெயகுமார் கருத்துத் தெரிவிக்கையில், “ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்ற கட்டமைப்பிற்குள், எமது அங்கத்தவர்களை ஒன்றிணைக்கவும், அந்தப் பிணைப்பைத் தொடர்ச்சியாகப் பேணவும் உதவும் ஒரு புதிய அனுபவத்தை வழங்குவதே எமது நோக்கமாகும். 2026 மே மாதம், Moneyball அங்குரார்ப்பண சம்பியன்ஷிப் தொடரை நாம் நடாத்தவுள்ளோம். இதில் போட்டியாளர்கள் புகழ்பெற்ற எம். எச். ஒமர் ஞாபகார்த்த கிண்ணம் மற்றும் ஏனைய பரிசுகளுக்காகப் போட்டியிடவுள்ளனர். இது எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள அதிரடி மற்றும் விறுவிறுப்பான நிகழ்வுகளுக்கான ஒரு ஆரம்பமாக அமையும்.
இந்த முதலீட்டின் சாத்தியக்கூறுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து வினவியபோது, புத்தாக்கச் சிந்தனை கொண்டவரும், அமைதியான சுபாவமுடைய அனுபவம் வாய்ந்த இலங்கை முதலீட்டாளருமான அஸ்லம் உமர் குறிப்பிடுகையில், “இலங்கையின் இளைஞர்கள், Digital Nomads, வெளிநாட்டவர்கள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒரு வாய்ப்பாகவே ஏயார் ஸ்போர்ட்ஸ் கிளப் பை நாம் காண்கின்றோம். சுறுசுறுப்பான சமூக வாழ்விற்காக (For an Active Social Life) என்ற கருப்பொருளில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் உண்மையான ஆரோக்கியம் என்பது கடினமான உடற்பயிற்சி மற்றும் சமூகப் பிணைப்பு ஆகிய இரண்டிலிருந்தும் பிறக்கின்றது என்ற நம்பிக்கையிலேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு தொழில்முறை வீரராகவோ, வார இறுதியில் ஓய்வெடுக்க விரும்பும் ஒருவராகவோ அல்லது ஒரு சிறந்த சமூகத்தைத் தேடும் பெற்றோராகவோ இருக்கலாம்; உங்கள் வாழ்வை உற்சாகமாகவும், ஊக்கமளிப்பதாகவும் மாற்றுவதற்கு ஏயார் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஏதோ ஒன்று நிச்சயம் உண்டு.
இலங்கை ஒரு அற்புதமான நாடு. உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கக்கூடிய இவ்வாறான முதலீடுகளுக்கு இது தகுதியான இடமாகும். நாம் எதிர்காலத்திற்காக மாத்திரம் முதலீடு செய்யவில்லை; மாறாக, உலகளாவிய சந்தையை மையமாகக் கொண்டு எமது எதிர்காலத்திலேயே முதலீடு செய்கிறோம். இவ்வாறான முதலீடுகளுக்குப் பரந்த கொள்கை ரீதியான ஆதரவு அவசியமான போதிலும், எனது வாழ்நாள் அனுபவத்தில் நான் நம்புவது என்னவென்றால், நமக்கான பாதையை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். மற்றவர்கள் எமக்கான பாதையைத் தீர்மானிக்கும் வரை காத்திருப்பது போதுமானதல்ல. இந்த வசதி இளைஞர்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் குறைந்தவர்கள் என அனைவருக்கும் பொதுவானது. இது ஒருவரோடு ஒருவர் இணைந்து தரமான நேரத்தைச் செலவிடுவதற்கான ஒரு தளமாகும். இலங்கையின் சமூக மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சூழலை மாற்றி அமைக்கும் ஒரு திட்டமாகவே Air Sports உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தூரநோக்கை நனவாக்கியதையிட்டு நாம் பெருமிதம் கொள்கின்றோம். எமது இந்த முயற்சியை, சவால்களைத் தாங்கி மீண்டெழும் எமது மக்களின் மனஉறுதிக்கும், முதலீட்டாளர்களின் தன்னம்பிக்கைக்கும் ஒரு அடையாளமாக வர்த்தக சமூகம் நோக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு, எமது பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். இலங்கை ஒரு உன்னதமான நிலையை அடைவது உறுதி; அந்தப் பயணத்தில் ஒரு பங்காளியாக இருப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். எமக்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு, ஆனால் அதனைத் தகுந்த முறையில் பேணி முன்னோக்கிச் செல்வது எமது கைகளிலேயே உள்ளது. புத்தாக்கமான முதலீடுகளில் அச்சமின்றி ஈடுபட வேண்டும் என்பதை எனது தந்தை தனது செயல்களின் மூலம் எமக்குக் காட்டினார்; அந்த வழியில் நாமும் தொடர்ந்து பயணிக்க வேண்டும்,” என்றார்.
“Air Sports Club ஒரு Third Space ஆகும். இது இல்லம் (முதல் தளம்) மற்றும் அலுவலகம் அல்லது பாடசாலை (இரண்டாம் தளம்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு சமூகச் சூழலாகும். நீங்கள் யாராக இருந்தாலும், ஒருவரோடு ஒருவர் இணைந்து, கலந்துரையாடி, ஒரு சமூகமாக ஒன்றிணைவதற்கான இடமே இதுவாகும். உங்களின் அந்த மூன்றாவது தளமாக இது விளங்கும்.” “விளையாட்டு, நல்வாழ்வு மற்றும் சமூகம் ஆகியவற்றை தடையின்றி ஒன்றிணைக்கும் ஒரு வசதியை வழங்குவதையிட்டு Air Sports International Pvt Ltd பெருமிதம் கொள்கின்றது. இது இலங்கையின் மீண்டெழும் உறுதிக்கும், எமது இலட்சியங்களுக்கும் ஒரு சான்றாகும். இந்த நற்பண்புகள் ஒவ்வொரு நாளும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு இடமாக இது திகழும்.” மேலதிக விபரங்களுக்கு, பர்ஹனுதீன் தசீமை +94 77 608 8001 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும்.
