Apr 6, 2026 - 05:34 PM -
0
வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் தெளிவான உத்தரவாதத்துடன், ஏற்கனவே அறியத்தரப்பட்ட மோசடிச் சம்பவம் ஒன்று குறித்த மேலதிக விபரங்களை National Development Bank PLC (வங்கி) பகிர்ந்துகொள்ள விரும்புகின்றது. இச்சம்பவத்தால் வாடிக்கையாளர்களின் நிதித் தொகைகளுக்கு எவ்விதமான பாதிப்பும் கிடையாது என்பதை எவ்வித தயக்கமுமின்றி வங்கி மீண்டும் வலியுறுத்துகின்றது.
வாடிக்கையாளர்களுடைய நிதித் தொகை அனைத்தும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் உள்ளன. தனது தொழிற்பாடுகள் மத்தியில் இடையூறற்ற சேவைகளுடன் வங்கி தொடர்ந்தும் வழமை போல் இயங்கி வருகின்றது. தனது பொறுப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றி, வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்குத் தேவையான போதுமான ஆற்றலுடன் அதன் நிதி நிலவரம் தொடர்ந்தும் வலுவாகவுள்ளது.
2026 ஏப்ரல் 2 அன்று வெளியிடப்பட்ட விபரங்களுக்குப் புறம்பாக, இச்சம்பவமானது குறிப்பிட்டதொரு தொழிற்பாட்டுப் பிரிவுக்கு வரையறுக்கப்பட்டது என்பதையும், வெளித்தரப்பினருடன் இணைந்து குறிப்பிட்ட ஊழியர்கள் சிலர் மாத்திரமே ஈடுபட்டுள்ளனர் என்பதையும் வங்கி உறுதிப்படுத்துகின்றது. இவ்விவகாரம் தொடர்ந்து அதிமுக்கியத்துவம் வாய்ந்த முறையில் கையாளப்பட்டு வருகின்றது.
இவ்விவகாரம் கண்டறியப்பட்ட உடனேயே வங்கி உடனடியாகவும், உறுதியாகவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது இடம்பெற்று வருகின்ற விசாரணைகளுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள செயல்பாட்டுப் பிரிவானது திருத்தம் செய்யப்பட்ட அறிக்கைக் கட்டமைப்புக்கள் மற்றும் நிறுவனம் முழுவதும் மேம்படுத்தப்பட்ட நுழைவுக் கட்டுப்பாடுகளுடன் வேறான மேற்பார்வையின் கீழ் தற்போது பேணப்படுகின்றது. சட்ட அமுலாக்க அதிகாரத் தரப்பினரின் ஆதரவுடன் குறிப்பிட்ட நிதியை மீட்பதற்கான முயற்சிகளில் பல முனைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இவ்விவகாரம் குறித்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் உள்ளிட்ட தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் எழக்கூடிய மிக மோசமான சூழ்நிலையைக் கருதுகையில், இச்சம்பவம் காரணமாக எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச இழப்பினை முழுமையாக கணக்கு வைத்த பின்னர், 2026 மார்ச் 31ல் முடிவடைந்த காலாண்டில் உள்ளவாறு கணக்காய்வு செய்யப்படாத வரிக்குப் பின்னரான நட்டம் சுமார் ரூபா 4.0 பில்லியன் தொகையாக இருக்குமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2025 ன் 4 ம் காலாண்டில் ரூபா 3.5 பில்லியன் தேறிய இலாபத்துடன், 2025 டிசம்பர் 31ல் முடிவடைந்த ஆண்டில் ரூபா 11.0 பில்லியன் தொகை என்ற தேறிய வரிக்குப் பின்னரான இலாபத்தை வங்கி பதிவு செய்துள்ளது. ஆகவே நிதிரீதியாக வங்கி தொடர்ந்தும் உறுதியாகவுள்ளது. மோசடி காரணமாக எதிர்பார்க்கப்படுகின்ற பாதிப்பிற்கு மத்தியிலும் வங்கியின் பொதுப் பங்கு அடுக்கு I (Common Equity Tier I), அடுக்கு I (Tier I) மற்றும் மொத்த மூலதன போதுமை விகிதம் (Total CAR) ஆகியன குறைந்தபட்ச ஒழுக்குமுறைத் தேவைப்பாடுகளான முறையே 7.0%, 8.5% மற்றும் 12.5% ஆகியவற்றை விடவும் மேல் மட்டத்தில் காணப்படுகின்றன. 2026 மார்ச் 31ல் உள்ளவாறு கணக்காய்வு செயய்ப்படாத அதன் மொத்த சொத்துத்தளமானது சுமார் 990.0 பில்லியன் தொகையுடன், சுமார் 0.7% தேறிய வீழ்ச்சியை வங்கி பதிவு செய்யும்.
இது குறித்த முழுமையான விபரங்கள் இலங்கை மத்திய வங்கிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. வங்கியின் சீரான செயற்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், போதுமான அளவில் திரவத்தன்மை மற்றும் மூலதன மட்டங்களைப் பேணுவதற்கும் வங்கிக்கு உதவுவதற்காக மத்திய வங்கி தனது அதிகார வரம்பினுள் உரிய ஒழுங்குமுறை ஆதரவையும், மேற்பார்வையையும் வழங்கியுள்ளது.
ஒழுங்குமுறை ஆணைக்கு அமைவாக 2026 ஏப்ரல் 6 அன்று பங்குதாரர்களுக்கு பணமாக செலுத்தப்படவேண்டிய பங்கு இலாபத் தொகை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பங்கு வடிவில் வழங்கப்படும் பங்கு இலாபம் திட்டமிட்டபடி வழங்கப்படும்.
மோசடி குறித்த முழுமையான மற்றும் பாரபட்சமற்ற ஆய்வை மேற்கொள்வதற்காக சுயாதீன தடயவியல் கணக்காய்வாளர் ஒருவரை பணிப்பாளர் சபை நியமிக்கும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு NDB வங்கி தொடர்ந்தும் உறுதி பூண்டுள்ளதுடன், இது தொடர்ப்பான முக்கியமான தகவல் விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு உரிய முறையில் அவற்றைத் தெரிவிக்கும்.
ஊகங்களையும் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல் விபரங்களையும் பரப்புவதைத் தவிர்க்குமாறு வங்கி பொதுமக்களை வலியுறுத்துகிறது. இது குறித்த சரியான விபரங்களை அறிந்துகொள்ள விரும்புகின்ற வாடிக்கையாளர்கள் தமக்கு அருகிலுள்ள NDB வங்கிக் கிளையை, வாடிக்கையாளர் சேவை முகாமையாளரை அல்லது 0117448850 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
