Header Logo

வணிகம்
EUDR இன் வனஅழிப்புத் தடுப்பு காலக்கெடு நெருங்கும் நிலையில் வனஅழிப்பு அற்ற சான்றிதழ் வழங்கலில் Control Union Sri Lanka இரு சர்வதேச சாதனைகளை பதிவு

Apr 8, 2026 - 04:43 PM -

0

EUDR இன் வனஅழிப்புத் தடுப்பு காலக்கெடு நெருங்கும் நிலையில் வனஅழிப்பு அற்ற சான்றிதழ் வழங்கலில் Control Union Sri Lanka இரு சர்வதேச சாதனைகளை பதிவு

Control Union Sri Lanka, வனஅழிப்பு அற்ற சான்றிதழ் வழங்கலில் தொடர்ச்சியான உலகளாவிய மைல்கற்களை எட்டியுள்ளது. உலகின் முதலாவது வனஅழிப்பு அற்ற தரநிலை (DFS) சான்றிதழை வழங்கிய அந்த நிறுவனம், அதனைத் தொடர்ந்து அண்மையில் உலகின் முதலாவது DFS குழுமச் சான்றிதழை சம்சன் இறப்பர் இன்டஸ்ட்ரீஸ் பிரைவட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கி மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது. 

இவ்விரு சான்றிதழ்களும், Control Union இன் புதிதாக உருவாக்கப்பட்ட DFS கட்டமைப்பைச் செயற்படுத்திய உலகின் முதலாவது நாடாக இலங்கையை அடையாளப்படுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வனஅழிப்பு ஒழுங்குமுறை (EUDR) நிபந்தனைகளை உற்பத்தியாளர்களும் விநியோகச் சங்கிலி இயக்குனர்களும் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் இக்கட்டமைப்பு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Control Union இன் அனைத்து பிராந்தியக் குழுக்களுக்கும் இடையிலான ஒரு வருடகால ஒத்துழைப்பைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இந்த DFS தரநிலை, 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. இத்தரநிலையின் கீழ் முதலாவது சான்றிதழ் ஹப்புகஸ்தென்ன பிளான்டேஷன்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பிரவுண்ஸ் பிளான்டேஷன்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் பதினொரு இறப்பர் பெருந்தோட்டங்கள் இதன்கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியான நிபந்தனைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள், அத்துடன் வனஅழிப்பு அற்ற நிலை மற்றும் நிலப் பயன்பாட்டு உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களில் முழுமையான இணக்கப்பாட்டைப் பூர்த்தி செய்தமைக்காக இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

சம்சன் இறப்பர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த குழுமச் சான்றிதழ், இக்கட்டமைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க பரிணாமத்தை பிரதிபலிக்கின்றது. ஒரு தனிப்பட்ட சான்றிதழானது ஒரு நிறுவனத்தை மாத்திரம் உள்ளடக்கும் அதேவேளை, இந்த குழுமச் சான்றிதழ் மாதிரியானது இறப்பர் செய்கையில் ஈடுபடும் சிறு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல உற்பத்தியாளர்களை ஒரு பொதுவான சான்றிதழ் கட்டமைப்பின் கீழ் இயங்க அனுமதிக்கின்றது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EUDR) நிபந்தனைகளுக்குத் தேவையான அதே கடுமையான தரநிலைகளைப் பேணும் அதேவேளை, சிறிய அளவிலான உற்பத்தியாளர்களின் நிர்வாக மற்றும் நிதி ரீதியான சுமைகளைக் குறைக்க உதவுகின்றது. 

Control Union Sri Lanka இன் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ரணவக கருத்துத் தெரிவிக்கையில், “ஹப்புகஸ்தென்ன பிளான்டேஷன்ஸ் அல்லது சம்சன் இறப்பர் போன்ற நிறுவனங்களுக்கு மாத்திரமன்றி, இது இலங்கையின் ஒட்டுமொத்த விவசாயத்துறைக்கும் அர்த்தமுள்ள சாதனையாக அமைந்துள்ளது. நிலைபேறாண்மை மற்றும் விநியோக சங்கிலி ஒன்றிணைப்பு ஆகியவற்றில் இலங்கையின் உற்பத்தியாளர்கள் உயர் சர்வதேச நியமங்களை கொண்டிருப்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.” என்றார். 

இவ்வேளையில் இதன் முக்கியத்துவம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. ரப்பர், கொக்கோ, கோப்பி, பாம் எண்ணெய், சோயா, மரம் மற்றும் கால்நடை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த EUDR ஒழுங்குமுறை, ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு 2026 டிசம்பர் 30 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது. அத்துடன், நுண் மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு 2027 ஜூன் 30 முதல் இது நடைமுறைக்கு வரும். இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தத் தவறும் நிறுவனங்கள், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தைகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியச் சந்தைக்கான அணுகலை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்க நேரிடும். 

Control Union இன் இந்த DFS கட்டமைப்பு இச்சவால்களை நேரடியாகக் கையாளுகின்றது. EUDR இன் கீழ் வரும் ஏழு முக்கிய பொருட்களையும் ஒரே தரநிலையின் கீழ் உள்வாங்கி, சுயாதீனமாக தணிக்கை செய்யப்பட்ட ஒரு தெளிவான இணக்கப்பாட்டு வழிகாட்டலை இது வழங்குகின்றது. இச்சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு, பண்ணை மட்டத்திலான உறுதிப்படுத்தப்பட்ட உற்பத்தி மூலத்தைக் கண்டறியும் வசதி, புவிசார் இருப்பிடத் தரவுகள், இடர் மதிப்பீடு மற்றும் விநியோகச் சங்கிலியின் முழுமையான வெளிப்படைத்தன்மை ஆகிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுதல் அவசியமாகும். 

தற்போது Control Union, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EUDR) நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதில் உலகளாவிய ரீதியில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. காலக்கெடு நெருங்கி வருவதால், இந்த DFS சான்றிதழுக்கான கேள்வி கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆவணப்படுத்தல், தணிக்கை செய்தல் மற்றும் முறைமை உறுதிப்படுத்தல் (Systems verification) ஆகியவற்றுக்குத் தேவையான கால அவகாசத்தைக் கருத்திற்கொண்டு, உற்பத்தியாளர்களும் கொள்வனவாளர்களும் முன்கூட்டியே இதில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title