Header Logo

வணிகம்
புத்தாக்கம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் உயர் தர இலங்கை தேயிலையை உருவாக்கும் கெனில்வர்த் தோட்டம்

Apr 10, 2026 - 12:08 PM -

0

புத்தாக்கம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் உயர் தர இலங்கை தேயிலையை உருவாக்கும் கெனில்வர்த் தோட்டம்

1942ஆம் ஆண்டு இருந்த பழைய கட்டடத்திற்குப் பதிலாக, 1947இல் தற்போதைய தொழிற்சாலை உருவானது முதல், கெனில்வர்த் பெருந் தோட்டம் உலகப்புகழ் பெற்ற தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது. நீண்ட, மெல்லிய கம்பி போன்ற சுருட்டப்பட்ட இலைகளுக்காகவும்; கறுப்பான, தூய்மையான தோற்றத்திற்காகவும் இவை அறியப்படுகின்றன. 2.5 மணிநேரம் நீடிக்கும் விரிவான பாரம்பரிய (Orthodox) முறையில் நேர்த்தியாக உருட்டப்படும் இந்தத் தேயிலை, செப்பு நிறத்திலான பிரகாசமான தேநீரை, நாவிற்கு இதமான அடர்த்தியான சுவையையும், மரங்களின் நறுமணத்தையும், லேசான எலுமிச்சைச் சுவையையும் கொண்டது. இலங்கையின் மத்திய மாகாணத்தில் கினிகத்தேனைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நடுத்தர மலைநாட்டு தேயிலைத் தோட்டம், Hatton Plantations PLC நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. TRI 2043 போன்ற அதிக விளைச்சல் தரும் VP Clones பயன்படுத்தி, 14 தரங்களிலான உயர்தர இலை மற்றும் பகுதி-இலை கறுப்புத் தேயிலையை இது உற்பத்தி செய்கிறது. பாலுடன் சேர்த்து அருந்துவதற்கு ஏற்ற இதன் வலுவான Breakfast blend தேயிலை, கொழும்பு தேயிலை ஏலத்தில் தொடர்ந்து உச்ச விலையைப் பெற்று வருகிறது. 

இலங்கையின் மலையகத்தில் கோப்பிப் பயிர்ச்செய்கைக்குப் பிந்தைய மாற்றத்தின்போது, 19ஆம் நூற்றாண்டில் உருவான Kenilworth, இன்று தரநிலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் Fairtrade சான்றிதழ் பெற்றுள்ள இத்தோட்டம், வாழ்வாதாரங்கள், ஏற்றுமதி வருவாய் மற்றும் இலங்கை தேயிலையின் உலகளாவிய நற்பெயர் ஆகியவற்றிற்கு வலுசேர்க்கிறது. அத்துடன், காலனித்துவ காலப் புத்தாக்கத்திலிருந்து நவீன தரம் மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் நோக்கிய பெருந்தோட்டத் துறையின் பயணத்தையும் இது பிரதிபலிக்கிறது. 

மூலோபாய அமைவிடம், வரலாற்று அடித்தளம் மற்றும் உரிமையாளர் பரிணாமம் கெனில்வர்த் தேயிலைத் தோட்டம் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில், கொழும்பிலிருந்து சுமார் 102 கிலோமீட்டர் தொலைவில், கினிகத்தேனை நகருக்கு அருகில் அமைந்துள்ளது. பிரித்தானியாவின் வார்விக்ஷயரில் (Warwickshire) உள்ள கெனில்வர்த் கோட்டையின் (Kenilworth Castle) நினைவாக இடப்பட்ட இந்தப் பெயர், பிரித்தானிய உரிமையின் கீழ் உருவான இதன் ஆரம்பக்கால வரலாற்றைப் பிரதிபலிக்கிறது. இது முதலில் M/s Gordon Frazer & Co. Ltd நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டது. 

களனி மற்றும் மகாவலி ஆறுகளுக்கு இடையே, 616 முதல் 640 மீற்றர் வரையான உயரத்தில் அமைந்துள்ள இத்தோட்டம், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றுகளின் தாக்கத்தினால் ஆண்டுக்கு சுமார் 200 நாட்களில் பரவக்கூடிய ஏறத்தாழ 4,500 மில்லிமீற்றர் வருடாந்த மழையைப் பெறுகிறது. கடல் மட்டத்திலிருந்தான உயரம், காலநிலை மற்றும் நீர் வளங்கள் ஆகியவற்றின் இந்தச் சேர்க்கை, கெனில்வர்த் தோட்டத்தை நடுத்தர மலைநாட்டு தேயிலை உற்பத்திக்கு ஒரு சிறந்த இடமாக மாற்றியுள்ளது. இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலை கொழும்பு தேயிலை ஏலத்தில் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இலங்கையின் மத்திய மலையகத்தில் கோப்பி (Coffee) பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, 1880ஆம் ஆண்டளவில் பிரித்தானிய பெருந்தோட்ட உரிமையாளர்கள் கோப்பியிலிருந்து தேயிலை பயிர்ச்செய்கைக்கு மாறிய காலகட்டத்தில் இத்தோட்டத்தின் உத்தியோகபூர்வ வரலாறு தொடங்குகிறது. ஆரம்பகால உரிமையாளர்களாக R.P. Rudd (1880–1892), Midland Ceylon Tea Co. (1898–1899) மற்றும் Kenilworth (Ceylon) Tea Co. Ltd. (1923–1928) ஆகியவை பதிவாகியுள்ளன. இது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தேயிலைச் சொத்துக்கள் நிறுவன உரிமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டதை பிரதிபலிக்கிறது. கெனில்வர்த் தோட்டத்தில் பதிவான கடைசி பிரித்தானிய தோட்ட அதிகாரி W.R.D. Waller ஆவார். அதன் பின்னர், இதன் நிர்வாகம் வட்டவலை பெருந்தோட்ட நிறுவனத்தின் வசம் நகர்ந்து, 2019ஆம் ஆண்டு முதல் ஹட்டன் பிளான்டேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றது. 

அளவீடு மற்றும் உற்பத்தித்திறன் அளவீடுகள் 

கெனில்வர்த் இன்று ஒரு முக்கியமான உற்பத்திப் பிரிவாகத் திகழ்கிறது. இந்தத் தோட்டம் மொத்தம் 603.11 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 49 சதவீதம், அதாவது 295.36 ஹெக்டேரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் விறகு உற்பத்தி, காடுகள் மற்றும் எதிர்கால மறுசீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட புல்வெளிகளாகப் பராமரிக்கப்படுகிறது. இது தற்போதைய உற்பத்தியையும் எதிர்கால வளர்ச்சியையும் சமமாக உறுதி செய்கிறது. 

தேயிலை பயிரிடப்பட்ட நிலத்தில் 86 சதவீதம் அதிக விளைச்சல் தரும் நவீன ரகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பெருந்தோட்ட நிலங்களிலிருந்து ஆண்டுக்கு சுமார் 5,60,000 கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு ஹெக்டேருக்கு 1,900 கிலோ கிராம் விளைச்சலுக்கு சமமாகும். இந்த உற்பத்தி பெருந்தோட்டத்தின் இலாபத்தை அதிகரிப்பதோடு நாட்டின் ஏற்றுமதிக்கும் உதவுகிறது. மற்றவர்களிடம் இருந்து வாங்கப்படும் தேயிலை இலைகளையும் சேர்த்து, தொழிற்சாலையின் மொத்த உற்பத்தி ஆண்டுக்கு 8,00,000 கிலோ கிராமாக உயர்கிறது. இது சிறு தோட்ட உரிமையாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் வாழ்வாதாரமாக அமைகிறது. 

இந்த அளவிலான உற்பத்தி நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதுடன், தோட்டத்துடன் தொடர்புடைய சுமார் 3,029 குடியிருப்பாளர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது. கொழும்பு தேயிலை ஏலத்தில் கெனில்வர்த்தின் பாரம்பரிய (Orthodox) வகை தேயிலை பெரும்பாலும் அதிக விலையைப் பெறுகிறது. நிலையான தரம் மற்றும் பல தசாப்தங்களாக நிலவும் நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். இது ஏனைய தேயிலைத் தோட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதோடு, உலக சந்தையில் இலங்கை தேயிலையின் நற்பெயரையும் உறுதிப்படுத்துகிறது. முறையான பராமரிப்பும் நேர்த்தியான தயாரிப்புமே சர்வதேசப் போட்டிகளுக்கு மத்தியில் சிறந்த இலாபத்தைத் தரும் என்பதை இது நிரூபிக்கிறது. 

விவசாயத்தில் நவீன புத்தாக்கங்கள், பயிர் வகைப்படுத்தல் மற்றும் சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றுதல் 

கெனில்வர்த் வெறும் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாமல், நவீன விவசாய முன்னேற்றத்திலும் ஈடுபட்டுள்ளது. இது ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: Black Stone பிரிவில் வரலாற்றுச் சிறப்புமிக்க குளமும் பிரிட்டிஷ் காலத்து சிறிய நீர்மின் நிலையமும் உள்ளன; நைஸ்ராக் (Gneissrock) பிரிவில் தனித்துவமான தேயிலை ரகங்கள் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவும் காலநிலையைத் தாங்கும் வகையில் வெவ்வேறு தேயிலை வகைகளைக் கொண்டுள்ளன. இங்கு உருவாக்கப்பட்ட KNK 16-3 என்ற தேயிலை ரகம் மிகவும் பிரபலமானது. தோட்டத்தின் நடைமுறைகளும் தேசிய ஆராய்ச்சியும் இணைந்து செயல்படுவதால், அதிகரித்து வரும் செலவுகளையும் காலநிலை மாற்றத்தையும் சமாளித்து இலங்கை தேயிலையின் தரத்தை நிலைநாட்ட முடிகிறது. 

கெனில்வர்த் பல சர்வதேச தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் ஃபேர்டிரேட் (Fairtrade) அங்கீகாரம் பெற்றுள்ளதோடு, தரம் மற்றும் பாதுகாப்பிற்கான பல முக்கிய சான்றிதழ்களையும் (HACCP, Rainforest Alliance போன்றவை) இது கொண்டுள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இங்குள்ள உணவுப் பாதுகாப்பு, தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய உலகளாவிய தரக்கட்டுப்பாடுகள் இலங்கை தேயிலையை சர்வதேச சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய உதவுகின்றன. 

சமூக வேர்களும் நீடித்த தாக்கமும் 

நூற்றாண்டுகளுக்கு மேலான பெருந்தோட்ட வரலாற்றைக் கொண்ட கெனில்வர்த், இன்று ஒரு துடிப்பான சமூகமாகத் திகழ்கிறது. ஆரம்பகாலத்தில், தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பகுதிகளில் பிரிட்டிஷ் மேலாளர்களுக்கும் இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. ஆனால் இன்று, இந்த எஸ்டேட் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு முறையான வீடுகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் நிலையான வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. கெனில்வர்த்தின் வரலாற்றில் 1930களில் நடந்த ஒரு துயரமான சம்பவம் போன்ற கடினமான தருணங்களும் உண்டு. திருடப்பட்ட பண விவகாரத்தில் கண்காணிப்பாளர் திரு. ராபர்ட்ஸ் ஒரு எழுத்தாளரால் கொல்லப்பட்டார். உரிமையாளர் மாற்றங்கள், உலக சந்தை மாற்றங்கள் மற்றும் அரசு கொள்கை மாற்றங்களைக் கடந்தும், இந்த பெருந்தோட்டம் தொடர்ந்து வேலைவாய்ப்புகளையும் கிராமப்புற நிலைத்தன்மையையும் வழங்கி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், இலங்கையின் பெருந்தோட்டத்துறையின் வலிமைக்கு கெனில்வர்த் ஒரு சிறந்த உதாரணமாகும். காலனித்துவ காலத்தில் தொடங்கி, இன்று நவீன தொழில்நுட்பம் மற்றும் உயர்தரக் கட்டுப்பாடுகள் மூலம் உலகத்தரம் வாய்ந்த தேயிலையை உற்பத்தி செய்து, தனது சமூகத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title