May 5, 2026 - 05:52 PM -
0
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை சிறிலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவராக நியமித்தமை சரியான தீர்மானம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், கிரிக்கெட் விளையாட்டை தற்போதைய நிலையிலிருந்து உயர்த்துவதே மக்களின் எதிர்பார்ப்பு என்பதால், அவரும் அவரது குழுவினரும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட முடியும் என குறிப்பிட்டார்.
அத்துடன், முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா சுமுகமான முறையில் பதவியிலிருந்து விலக இணங்கியமை ஒரு சிறந்த முன்மாதிரி என்றும், அதற்கமைய எரான் விக்கிரமரத்ன தலைமையிலான குழுவினருக்கு முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,
"அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கப்பட்ட சரியான தீர்மானம் இது. எமக்குத் தேவை ஒரு கிரிக்கெட் நிர்வாகி. கிரிக்கெட் விளையாட்டை தற்போதுள்ள நிலையிலிருந்து உயர்த்துவதற்கும், மக்களின் அபிலாஷைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கும் ஒரு வலுவான குழுவை நாம் முன்வைத்துள்ளோம். அக்குழுவில் கிரிக்கெட் பற்றி அறிந்த, கிரிக்கெட்டை நேசிக்கின்ற, அனுபவம் மிக்க மற்றும் நிர்வாகம் பற்றி தெரிந்த அனைவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர்.
எரான் விக்கிரமரத்ன உள்ளிட்ட இந்தக் குழுவினால் இலங்கையின் கிரிக்கெட்டை ஒரு சிறந்த இடத்திற்குக் கொண்டு வர முடியும் என நாம் நம்புகிறோம். அதுவே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எனவே நாம் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறோம். அக்குழுவினர் மிகவும் வலுவாக ஒன்றிணைந்து இதற்காக முன்வந்துள்ளனர். ஷம்மி சில்வா அவர்கள் மிகவும் சுமுகமான முறையில் இந்தப் பதவியைத் துறந்தார். அது ஒரு நல்ல முன்மாதிரி என்று நான் நினைக்கிறேன். அதேபோல் எரான் விக்கிரமரத்ன அவர்கள் இதனைப் பொறுப்பேற்றுள்ளார். எனவே நாம் அவர்களைச் செயற்பட அனுமதிப்போம்" எனத் தெரிவித்தார்.
